Jul 5, 2010

சசிகலா - தெரியாத நிஜம்


ஜெயலலிதாவின் உயிர்த்தோழி..

- சசிகலாவுக்கு காலத்துக்கும் மாறாத கௌரவ அடையாளம் இது. மற்றபடி, சசிகலா எப்படி? அவருக்குப் பிடித்த & பிடிக்காத விஷயங்கள் என்ன? அவற்றையெல்லாம் எந்தக் கணத்திலும் அவர் சொன்னதில்லை. யாரும் (தைரியத்தோடு) கேட்டதும் இல்லை. சசிகலா என்கிற பெயரைத் தவிர பிரத்யேக விஷயங்கள் அத்தனையுமே பரம ரகசியம்தான்.

சசிகலாவின் பிறந்த ஊரான திருத்துறைப் பூண்டி வடக்குச் செட்டித் தெருவை தேடிப்போய் பேச்சு கொடுத்தால்.. நம் ‘மல்லிகை மகளை’ அட்டை டூ அட்டை புரட்டிவிட்டுத் தான் வாய் திறக்கிறார்கள். அவ்வளவு ஜாக்கிரதை!

‘‘இந்த மண்ணுல பொறந்த மகராசி, மாரியம்மா புண்ணியத்துல நினைச்சுப் பார்க்க முடியாத உசரத்துக்கு போயிட்டாங்க. ஆனா, ‘பவர்’ல இருந்தாலும் இல்லாட்டியும் பொறந்த மண்ணையும் தன்னோட இந்த சொந்தங்களையும் மறக்கவே மாட்டாங்க. பங்குனி மாச உற்சவம் வந்துட்டாலே மகா மாரியம்மனைக் கும்பிட வருஷம் தவறாமல் வந்திடுவாங்க.. மதுரை வீரன்தான் அவங்க குலசாமி. ஆனாலும், இங்கே இருக்கிற மகா மாரியம்மன்தான் அவங்களுக்கு இஷ்ட தெய்வம். ஆரம்ப காலத்தில் பெரிசா வசதி இல்லாத குடும்பம். அதனாலேயே நல்ல படிப்பு படிக்கக்கூட நாலு பேரோட உதவி ஒத்தாசையை எதிர்பார்க்கவேண்டிய நிலை. அதெல்லாம் தடாலடியா மாறினதே இந்த மகா மாரியம்மனோட புண்ணியத்தால தான்னு இன்னிக்கும் நம்புறவங்க அவங்க. படியளந்த தெய்வத்துக்கு பெரிசா கோயில் கட்டி ஜெயலலிதாம்மாவையே அழைச்சுக் கிட்டு வந்து திருவிழா கொண்டாடினாங்க.. அப்போ ஜெயலலிதாம்மா இந்தக் கோயிலுக்கு வெள்ளிக்கவசம் உபயம் கொடுத்தாங்க.

இப்பல்லாம் எப்பவாவதுதான் சசியம்மாவால ஊருக்கு வரமுடியுது. அந்த சமயத்துல யாரு என்ன உதவி கேட்டாலும், ‘செய்யறேன்’ ‘செய்யலை’னு எந்த பதிலும் சொல்ல மாட்டாங்க. ஆனா, அவங்க கிளம்பிப் போன பின்னாலேயே ‘அம்மா அனுப்பினாங்க’னு யாராச்சும் ஒருத்தர் வந்து, உதவி கேட்டவங்களுக்கு உரியதை செஞ்சுட்டு போவார். அந்தளவுக்கு எதையுமே வெளிக்காட்டிக்காத ஆளு அவங்க..’’ - அந்த செட்டித் தெருவே சிலிர்க்கிறது.

‘‘என் பேரைப் போட்டுடாதீங்க.. சசியம்மாவுக்கு என்னைய நல்லா தெரியும்..’’ என்றபடியே சசிகலாவின் பள்ளிக்கால நிகழ்வு ஒன்றை சொன்னார் ஒரு பெண்மணி.

‘‘திருத்துறைப்பூண்டியில் இப்பவும் இருக்கற போர்டு ஹைஸ்கூல்லதான் சசியம்மா படிச்சாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க.. சின்ன வயசுல அவங்க ரொம்ப பயந்த சுபாவம். யாரும் சாதாரணமா திட்டினாக்கூட ‘ஓ..’ன்னு அழுதுடுவாங்க. ஒரு தடவை ஸ்கூல்ல நடந்த ஓட்டப்பந்தயத்துல கலந்துகிட்டு ரெண்டாவது பரிசு வாங்கினாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டுக்கு எப்படியோ தெரிஞ்சுப் போச்சு. அப்புறமென்ன.. ‘வயசுக்கு வந்த பொண்ணு.. கால் தூக்கி ஓடுறதா’னு கேட்டு, ஒரு நாள் முழுக்க வீட்ல முட்டிப் போட வெச்சுட்டாங்க..’’ சிரிப்பு தாளாமல் சிரித்தார் அந்தப் பெண்மணி.

‘‘ஓட்டப்பந்தயத்தில மட்டுமில்லை.. மாணவர் மன்றம் நடத்துற இலக்கிய விழாக்களிலுமே சசிகலாவின் பங்களிப்பு தவறாமல் இருக்கும்’’ என்றபடி தொடர்கிறார் சசிகலாவின் பள்ளி சீனியரான அப்பாத்துரை.

‘‘இங்கிலீஷ் மருந்துக்கார வீடுனு சொன்னாத்தான் சசிகலா வீடு தெரியும். ஆரம்பத்தில் சந்திரசேகரன் பிள்ளைதான் திருத்துறைப்பூண்டி ஏரியாவுலயே இங்கிலீஷ் மருந்துக்கடை நடத்தியவர். அவரோட பையன்தான் விவேகானந்தன். இவருக்கு நாலு பையன், ரென்டு பொண்ணு. அதில மூத்த பொண்ணுதான் சசி. பந்த பாசத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம். ஆரம்பத்தில் செட்டித் தெருவில இருந்த புகையிலைக் கடைக்கார செட்டியார் வீட்டுலதான் சசிகலா ரொம்பப் பிரியமா இருப்பாங்க. சின்ன வயசு பிரியம் மாறாம இன்னிக்கும் அந்த செட்டியார் குடும்பத்தில் என்ன ஒரு விஷயம்னாலும் முதல் ஆளா ஆஜராகிடுவாங்க. கோயில் விசேஷத்துக்கு சசி வந்திருப்ப, ‘நம்மள எல்லாம் ஞாபகம் இருக்கோ இல்லியோ’னு நினைச்சு, ஒரு ஓரமா நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனா, முகத்தைப் பார்த்த உடனேயே ‘அண்ணே..’னு அவ்வளவு ஆசையா கூப்பிட்டாங்க. அப்படி பழசை மறக்காத மனசு அவங்களோடது!

எட்டாவது வரைக்கும் இங்கே படிச்ச சசி, அதுக்கப்புறம் மன்னார்குடிக்கு போயிட்டாங்க. அண்ணன்கள் தலையெடுத்த பிறகு அவங்க குடும்பம் ஓஹோனு முன்னேறிடுச்சு. அதுக்கப்புறம்தான் சசிக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இன்னிக்கும் அவங்க குடும்பத்துல என்ன விசேஷம் நடந்தாலும் யாருக்கு அழைப்பு போகுதோ இல்லையோ எங்களை மாதிரியான பொறந்த ஊர் ஆளுங்களுக்கு அவசியம் அழைப்பு வந்துடும்...’’ பெருமையோடு சொல்கிறார் அப்பாதுரை.

சந்தானகிருஷ்ணன், சசிகலாவுக்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தவர். அவர், ‘‘படிக்கிற காலத்திலேயே சசி ரொம்ப அமைதியான பொண்ணு. சுந்தரவதனம், வினோதகன், ஜெயராமன், திவாகரன்னு நாலு அண்ணன் தம்பிகளும் சசியை கண்ணுக்குள்ள வச்சுதான் பார்த்துக்கிட்டாங்கனு சொல்லணும். கண்டிப்பும் அந்த மாதிரி இருக்கும். பாசமும் அந்த மாதிரி இருக்கும். ஊர்ப்பக்கம் வர்றப்ப சித்தப்பா, பெரியப்பா, மாமானு எல்லா சமுதாய ஆட்களையும் உறவுமுறை சொல்லித்தான் சசி அழைப்பாங்க.

எனக்கு விவரம் தெரிஞ்சு அவங்க ஆறாவதோ ஏழாவதோ படிச்சப்ப, ஏதோவொரு வேஷம் போட்டு பள்ளிக்கூட நாடகத்துல நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல ஆர்வம் அதிகம். இருந்தாலும், வீட்டுக்குப் பயந்து படிப்பில் மட்டுமே தீவிரம் காட்டினாங்க.

இப்போ அடிக்கடி ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு பிஸியாகிட்டாங்க. ஆனாலும், யார் மூலமாவது ஊர்ல நடக்கிற நல்லது கெட்டதுகளைப் பற்றி தெளிவா தெரிஞ்சுக்குவாங்க. சம்பந்தப்பட்ட விசேஷ வீடுகளுக்கு சர்ப்ரைசா வந்து கதவைத் தட்டி, அவங்களை திக்குமுக்காட வெச்சிடுவாங்க.

பள்ளியில படிக்கறப்ப, அவங்ககிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயம்னா, மத்தவங்களை ஆத்மார்த்தமா மதிக்கிற குணம்தான். இன்னிக்கும் மத்தவங்களை மதிக்கிற குணத்தை அவங்க கைவிட்டுடலை. அதேமாதிரி, இந்த ஊர் மேலயும் உறவுங்க மேலயும் அவங்க வெச்சிருக்கிற வாஞ்சையும் குறையலை..’’ என்கிறார் வியப்பு மேலிட!

- நமது நிருபர்

Jul 2, 2010

மல்லிகை மகள் - ౩-ம் ஆண்டு சிறப்பிதழ்


உங்கள் மல்லிகை மகளுக்கு மூன்று வயது நிறைகிறது. தாய்மை உணர்வு பொங்கும் வாசகர்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளாலும் அவள் உள்ளம் பூரித்து நிற்கிறாள்.

இந்த சிறப்பிதழில் பல்வேறு புதிய அம்சங்கள்.. கூடுதல் பக்கங்களில் மலர்ந்திருக்கின்றன.

உங்களின் ஆதரவுக்கு உளப்பூர்வமான நன்றி!

சுப வரம் - ஜூலை இதழ்