Mar 31, 2009

உயிர்த்தெழுந்த சாந்தி


மல்லிகை மகள் ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை..

து 2006&ம் ஆண்டு, டிசம்பர் 9&ம் தேதி..

தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடத்தில் வந்து, வெள்ளிப் பதக்கம் பெற்றார் - தமிழகத்தின் தடகள வீராங்கனை சாந்தி!

கடுமையான பயிற்சியாலும், திறமையாலும் உலகளாவிய உயரத்தில் ஏறிய அந்தக் கிராமத்து பெண்ணை, ஏறிய அதே நாளில் அவ்வளவு உயரத்தில் இருந்து தலைகுப்புறத் தள்ளிவிடப்பட்டதுதான் கொடுமை!
‘பாலியல் சோதனையில் தோல்வி’ என்ற சிக்கல் எழுந்து, உலகமே பார்த்துக்கொண்டிருந்த அரங்கில்.. லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சாந்தியிடம் கொடுக்கப்பட்ட பதக்கம், பறிக்கப்பட்டது.

ஆனால், எந்தப் பெண்ணிடமிருந்து ‘பெண் தன்மை இல்லை’ என்ற காரணத்துக்காக பதக்கத்தைப் பறித்தார்களோ.. அதே பெண், இன்று பத்து ஏழை மாணவர்களை தன் பொறுப்பில் வைத்து ஒரு தாய்போல பராமரிப்பதோடு, 60 மாணவ, மாணவியருக்கு தடகளப் பயிற்சியும் அளிக்கிறார். ஓட்டப் பந்தயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர், 24 மணி நேரமும் பயிற்சி, பயிற்சி என்று ‘ஓடிக்’ கொண்டிருக்கிறார்!

‘‘எப்படி இருக்கீங்க சாந்தி?’’

‘‘நல்லா இருக்கேன்.. நிம்மதியா, சந்தோஷமா இருக்கேன். கடந்த ஒண்ணேகால் வருஷமா, இங்கே புதுக்கோட்டையில ‘அத்லெட்டிக் கோச்’ஆ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால நியமிக்கப்பட்டிருக்கேன். என்கிட்ட இப்ப அறுபது பசங்க பயிற்சி எடுத்துட்டிருக் காங்க.. ரன்னிங், ஜம்ப்பிங், த்ரோயிங்.. எல்லாத்திலேயும் பயிற்சி கொடுத்திட்டிருக்கேன்..’’

‘‘ஓட்டம்.. ஓட்டம்னு ஓட்டத்தையே உங்க மூச்சா நினைச்சுட்டிருந்த நீங்க, இந்த மாற்றத்தை எப்படி ஏத்துக்கிட்டீங்க?’’

‘‘என் மூச்சைத்தான் நிறுத்திட்டாங்களே, மேடம்!’’ என்று ‘சட்’டென்று கூற.. அந்தக் குரலின் வலியும் வேதனையும் நம்மை உலுக்கியது.

‘‘ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்படி, அப்படின்னு விளக்கிச் சொல்ல முடியாத சோகம் அது! என்னால ஏத்துக்கவே முடியாத ஒரு சூழ்நிலை! கிட்டத்தட்ட அது என் மரணம்! நான் எதைக் கனவு கண்டிருந்தேனோ, அந்தக் கனவு என் கைவசமாகி.. மறுநிமிஷமே கைவிட்டுப் போனது யாருக்கும் நடக்கக் கூடாத துரதிர்ஷ்டம்!

தொடர்ந்த முதுகுவலி காரணமா, ஏஷியன் கேம்ஸுக்குப் பிறகு நானே ஓடறதை நிறுத்தலாம்னுதான் திட்டமிட்டிருந்தேன். ஆனா, நான் நேசிச்ச ஒரு விஷயத்தை என்கிட்டருந்து வலுக்கட்டாயமா பிடுங்கிட்டாங்க.. என் கண்ணீரும் காயங்களும் கொஞ்ச நஞ்சம் இல்லை.. எல்லாரும் என்னென்னவோ பேசினாங்க.. ஏதேதோ எழுதினாங்க.. தோஹாவிலிருந்து வந்ததுக்கு அப்புறமும் அந்த சம்பவங்களும் அவமானமும் என்னை விரட்டினதாலதான் தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன்.. ஆனா, அதிலருந்தும் பிழைச்சப்பத்தான், ‘கடவுள் எனக்காக வேற ஏதோ வேலை வச்சிருக்கார்!’னு தோணுச்சு.

பழசையெல்லாம் மறக்க முயற்சி செஞ்சு, கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வர்றேன்.. பரவாயில்லை.. தெரிஞ்சோ தெரியாமலோ இந்த உலகமும் சமூகமும் எனக்கு நல்லதுதான் செய்திருக்கு! இல்லேன்னா, நான் ‘கோச்’ ஆகியிருப்பேனா? வசதியில்லாத புள்ளைங்களுக்கு இப்படி பிராக்டீஸ் கொடுக்கற வாய்ப்புத்தான் கிடைச்சிருக்குமா? இப்ப என் ஆசையெல்லாம் என் புள்ளைங்க ‘அத்லெட்டிக்ஸ்’ல நல்லா வரணும்.. உலக அளவில சாதிக்கணும், மெடல் வாங்கணும்கிறதுதான்!’’ என்றவரின் குரலில், ஆரம்பத்தில் இருந்த தொய்வும் சோர்வும் போய், உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்கியது.

‘‘உங்களுக்குத் தெரியுமா.. போன மாசம் நடந்த சென்னை மாரத்தான்ல அஞ்சு கிலோமீட்டர் பிரிவுல ஃபர்ஸ்ட் வந்தது ‘என்’ பையன்தான்.. பேரு வேணுகோபால். பத்தாயிரம் ரூபாய் கேஷ் பிரைஸ் வாங்கினான். அதே பிரிவுல தேர்ட் வந்ததும் முத்துக்குமார்&கிற ‘என்’ பையன்தான் . அது மட்டுமில்ல.. போபால்ல நடந்த தேசிய அளவிலான ஓட்டப் பந்தயத் தில் 300 மீட்டர் பிரிவுல, ‘என்’ பொண்ணு ராணி செகண்ட் வந்திருக்கா!’’ & சொல்லச் சொல்ல அப்படி ஒரு பெருமை அவர் பேச்சில்!

முதலிடம் பெற்ற மகனையும் மகளையும் பற்றி ஒரு தாய் எப்படிப் பூரிப்பாரோ, அதற்கு எள்ளளவும் குறைவில்லை அவரிடத்தில்! இந்தப் பிள்ளைகள் அனை வருக்குமே இப்போது சாந்தி ஒரு வளர்ப்புத் தாய்!

சாந்தியின் சொந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள கத்தக்குறிச்சி. பெற்றோர் சௌந்திரராஜன் & மணிமேகலை, செங்கல் சூளையில் கூலித் தொழிலாளிகள். மகளின் ஏற்றம், இறக்கம் & இதெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமே புரிபடாத அளவுக்கு வெகுளிகளாக, வெளியுலகம் தெரியாத அப்பாவிகளாக உள்ளனர்.

‘‘ஆனா, இப்ப அம்மாவும் அப்பாவும் அந்த அதிர்ச்சியிலேர்ந்து மீண்டு வந்துட்டாங்க.. ரொம்ப நார்மலா இருக்காங்க. ஏன்னா, என் லைஃப் இப்ப நார்மலா ஆயிடுச்சு இல்லையா? விளையாட்டில் மெடல்ங்கிறதுகூட அடுத்ததுதான்.. என் முதல் லட்சியமே என் தங்கை, தம்பிகளுக்கு மூணு வேளை நல்ல சாப்பாடு கொடுத்து, நல்லாப் படிக்க வைக்கணும்கிறதாதான் இருந்துச்சு! அதை ஓரளவுக்கு நிறைவேத்திட்டேன். பெரிய தங்கச்சி பாலிடெக்னிக் படிக்குது. அடுத்த தங்கச்சி 12&வதும் தம்பி 10&வதும் படிக்கிறாங்க.. இதுல ஒரு தம்பிக்கும் தங்கைக்கும் விளையாட்டுல நல்ல ஆர்வம் இருக்கு.. அவங்களையும் ‘அத்லெட்’&ஆ உருவாக்கணும்! பதக்கக் கனவு கனவாகவே இருந்தாலும்கூட, என்னோட இந்த லட்சியத்தை நனவாக்கற முயற்சியில நிச்சயமா வெற்றியடைஞ்சிடுவேன்னு தோணுது’’ என்கிறார், உறுதியாக.

தற்சமயம் புதுக்கோட்டையில் ஒரு வாடகை வீட்டில் இருக்கும் சாந்தி, தன்னிடம் பயிற்சி பெறும் ஏழை மாணவர்களுக்காக செய்திருக்கும் காரியம் பிரமிப்பூட்டுகிறது. மிகவும் வசதியில்லாத, ஆனால் விளையாட்டில் திறமை மிக்க சில மாணவர்களை தன் வீட்டிலேயே தங்க வைத்திருப்பதோடு, அவர்களுக்கு மூன்று வேளை உணவும் அளித்துப் பராமரிக்கிறார்!

‘‘உங்க வருமானத்துல இது சாத்தியமா சாந்தி?’’ என்றால், ‘‘நிச்சயமா இல்ல..’’ என்று சிரிக்கிறார்.

‘‘எனக்கு நிரந்தர வேலைகூட கிடையாது.. கான்ட்ராக்ட் தான்! சம்பளமும் கம்மிதான்! ஆனா.. அதையெல்லாம் நான் யோசிக்கல. இவங்கள்லாம் சுத்துப்பட்டுல இருக்கிற கிராமத்துப் பசங்க.. அப்பா, அம்மா வயல்ல கூலி வேலை செய்றவங்க. நல்ல சாப்பாட்டுக்கும் பயிற்சிக்கும் எங்க போவாங்க? அதான் இந்த இலவச ஹாஸ்டல், சாப்பாடு எல்லாம். நான் இந்த மாதிரி ஆரம்பக் கட்டத்துல இருக்கறப்போ எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை.. அதனால, எனக்குக் கிடைக்கற வருமானத்துல என்னால முடிஞ்ச வரைக்கும் செய்யலாம்னு இருக்கேன்.. முடியாதப்போ பார்த்துக்கலாம்!’’

‘‘வீட்டில் இத்தனை பேருக்கும் சமையல் யாரு?’’

‘‘வேற யாரு? நான்தான்.. காலைல ஆறு மணிக்கெல்லாம் கிரவுண்டுக்குப் போனா பிராக்டீஸ் முடிஞ்சு வர்றப்ப ஒன்பது மணி ஆயிடும்.. அப்புறம் இந்தப் பசங்களுக்கான சமையலை செஞ்சு முடிச்சிடுவேன்.. எல்லாரும் குளிச்சு, சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போவாங்க.. அப்புறம், ராத்திரி சாப்பாட்டை செய்து வச்சுட்டு ஈவனிங் பிராக்டீஸ்க்கு போவேன்.. பசங்க எல்லாம் நைட் வந்து சாப்பிட்டுப் படுப்பாங்க.. இதுவும் எனக்கு ஒரு குடும்பம்தான்!’’ என்னும் சாந்தி, ‘‘இந்தப் பசங்களுக்காக ஏதாவது பண்ணனும் மேடம்’’ என்கிறார், அந்த ‘ஏதாவது’க்கு அழுத்தம் கொடுத்து.

‘‘இவங்களைப் பெரிசா டெவலப் பண்ணனும். இன்னும் நாலஞ்சு வருஷத்துல என் பசங்கள்ல யாரையாவது ஒருத்தரை பெரிசா உருவாக்கி, ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி, நம்ம நாட்டுக்காக பதக்கம் வாங்கற வரைக்கும் ஓயமாட்டேன்.. இப்போதைக்கு எனக்குள்ள எரிஞ்சிட்டிருக்கற லட்சியம் அதுதான்!’’ என்றவரிடம், மெதுவாகக் கேட்டோம்.

‘‘உங்க சொந்த வாழ்க்கை பற்றி ஏதாவது திட்டம் வச்சிருக்கீங்களா? கல்யாணம் பற்றி...?’’ - நாம் முடிக்கும் முன்னரே பளிச்சென வருகிறது பதில்.

‘‘அதைப் பத்தி நினைக்கக் கூட இப்ப நேரமில்ல.. இப்ப என் வாழ்க்கை என் புள்ளைங்களைச் சுத்தித்தான்.. என் குறிக்கோள் எல்லாம் அவங்களை நல்லபடியா உருவாக்கணும்கிறதுதான்.. அதனால வேற எந்தச் சிந்தனைக்கும் திட்டங்களுக்கும் இடமில்லை.. ’’ - 27 வயதில் பெரிய அனுபவசாலிபோலப் பேசும் சாந்திக்கு, ஒரு வருத்தம்.. ஒரு ஆதங்கம்!

‘‘இவங்க எல்லாருமே வறுமையான குடும்பம் கிறதால, கிரவுண்டில் பிராக்டீஸ் பண்ணும்போது பேப்பர் போடுறவங்க வந்து, ‘வீடு வீடாப் போய் பேப்பர் போடு.. மாசம் 500 ரூபா தர்றேன்’னு கூப்பிட்டாப் போயிடறாங்க.. ரெண்டு மூணு பசங்க போயிட்டாங்க. என்னால தடுக்க முடியல.. ஏன்னா, என்னால அந்த 500 ரூபாயைக் கொடுக்க முடியாதே! அதேபோல, இந்தப் பிள்ளைங்களை ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல் போட்டிகளுக்கெல்லாம் நானே கஷ்டப்பட்டு அனுப்பிடறேன்.. ஆனா, இவங்க திறமை அதோட நின்னுடக் கூடாது.. உலகளவில் இவங்களை வெளிய கொண்டுவரணும்னா, அதுக்கு நிறையப் பணம் செலவழிக்கணும். எனக்கு அனுபவமும், பயிற்சி கொடுத்துக் கொண்டுவரக்கூடிய நம்பிக்கையும் இருக்கு.. ஆனா பண வசதி இல்லையேனு ரொம்ப வருத்தமா இருக்கு..! இருந்தாலும், எப்பாடுபட்டாவது நான் இழந்த பெருமையை, என் பிள்ளைங்க மூலமா இந்த தேசத்துக்குப் பெற்றுத் தரணும்கிறதுல உறுதியா இருக்கேன்!’’

இவருடைய உண்மையான அக்கறையும், தீயாய்க் கனன்று கொண்டிருக்கும் வெறியும், நிச்சயம் ஒரு நல்ல விளையாட்டு வீரரை இந்த தேசத்துக்கு உருவாக்கித் தரும். அப்போதுதான் இந்தத் ‘தாயின்’ மனதுக்கு ஒரு ‘சாந்தி’ கிடைக்கும்!

- பிரேமா நாராயணன்

Mar 28, 2009

நம் வாழ்க்கை நம் கையில்

ஏப்ரல் 2009இதழின் தலையங்கம்..
யதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!

முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.

மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!

வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.

மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’ என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.

பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! ‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.

நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.

ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்?!

Mar 9, 2009

தலைவாசல்

மல்லிகை மகள் - மார்ச் இதழின் தலையங்கம்..
ஏரியாக இருப்போம்!
வாழ்க்கைத் துயரங்களால் வலி கொண்ட ஒரு இளைஞன், தன் பழைய ஆசிரியரை நாடிச் சென்றான். தான் அனுபவிக்கும் வேதனைகளை எடுத்துச் சொன்னான்.
ஆசிரியர் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. கை நிறைய உப்புத் தூளை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடச் சொன்னார். பிறகு, அந்த தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். சில துளிகள்கூட குடிக்க முடியாமல் அவன் தவிக்க..
‘‘எப்படி இருக்கிறது இதன் சுவை?’’ என்று கேட்டார் ஆசிரியர்.
‘‘ஐயய்யோ.. வாயிலேயே வைக்க முடியலை சார்!’’ - முகம் சுளித்தான் இளைஞன்.
புன்னகைத்துக் கொண்ட ஆசிரியர், இன்னொரு கைப்பிடி உப்புத்தூளை எடுத்துக் கொள்ளச் சொல்லி, அருகிலுள்ள ஒரு ஏரிக்கு அவனை அழைத்துச் சென்றார். அந்த உப்புத்தூளை ஏரியில் போடச் சொன்னவர், பிறகு அந்த ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கச் சொன்னார். எந்தவித சங்கடமும் இன்றி அவன் அந்தத் தண்ணீரைக் குடிக்க..
‘‘எப்படி இருக்கிறது இதன் சுவை?’’ என்று கேட்டார்.
‘‘ம்.. நன்றாகவே இருக்கிறது!’’
‘‘உவர்ப்புச் சுவையை உணர்கிறாயா?’’
‘‘ம்..ஹூம்.. அது தெரியவே இல்லை..’’ - சந்தோஷமாக சொன்னான் இளைஞன்.
இப்போது அவன் அருகில் அமர்ந்து, அவன் கரங்களை ஆதரவாக எடுத்து வைத்தபடி ஆசிரியர் சொன்னார் - ‘‘வாழ்க்கையின் வலி என்பது இந்த கைப்பிடி உப்புத்தூள் போன்றதுதான். அதிகமும் இல்லை. குறைவும் இல்லை. அந்த வலி என்பது எப்போதும் மாறாமல் ஒரே அளவோடுதான் உள்ளது. ஆனால், அந்த வலியை நாம் உணர்வது என்பது, நாம் அதை வைத்திருக்கும் மனசின் விசாலத்தைப் பொறுத்தது. அதனால், வாழ்க்கை வலிகளால் கஷ்டப்படும்போது, நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உன் மனசை விசாலப்படுத்திக் கொள்வதுதான். டம்ளர் தண்ணீராக இருக்காதே. ஏரியாக இரு!’’
உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தில் ஆங்காங்கே வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு என்று பாதிப்புகள் பரவ.. அது எல்லோரது வாழ்விலும் பல்வேறு அம்சங்களில் எதிரொலித்து, வலிகளை உருவாக்கியபடி இருக்கின்றன.
இந்த நேரத்தில் நாம் பின்பற்றவேண்டிய மந்திரச் சொற்கள் இதுதான்.. ‘‘ஏரியாக இருப்பேன். டம்ளர் தண்ணீராக அல்ல!’’

Mar 1, 2009

உங்கள் வீட்டில் பணம் செழிக்க.. இருபத்தைந்து வழிகள்

மார்ச் 09 இதழிலிருந்து ஒரு கட்டுரை..
டந்த சில மாதங்களாக உலகளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி எல்லோரையும் பயமுறுத்தி வருகிறது. இன்று இருக்கும் வேலை, நாளை இருக்குமா என்ற சந்தேகத்திலேயே பலர் நாட்களை கடத்துகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கை கொடுப்பது சேமிப்பு பழக்கம்தான்! சேமிப்பு என்பது பணம் மட்டுமல்ல.. அது பல வழிகளிலும் இருக்கலாம். இதோ, நிரூபிக்கப்பட்ட 25 ரகசியங்கள்..

1. வங்கிகளில் இருக்கும் பணம்..
சாதாரணமாக சேமிப்பு என்றதும், வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் பணம் போட்டு வருவதுதான் நினைவுக்கு வரும். ஆனால், சேமிக்கும் பணம் முழுவதும் சேமிப்புக் கணக்கிலேயே இருந்தால் அது எந்தவிதமான பயனையும் தராது. அவசரத் தேவைக்கு எவ்வளவு பணம் தேவையோ அதை மட்டும் சேமிப்புக் கணக்கில் வைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை பிக்சட் டெபாசிட்டில் போடுவதுதான் உத்தமமான காரியம். அது, அதிக வட்டி மற்றும் வருமானத்தைப் பெற்றுத் தருவதால் பணம் பெருக வழி வகுக்கும். பல வங்கிகளில் ‘ஃப்ளெக்ஸி டெபாசிட்’ என்று உள்ளது. அதில் போட்டு வைத்தால் அவர்களே நிரந்தர வைப்புக் கணக்கிற்கு மாற்றி விடுவார்கள்.
2. ரெகரிங் டெபாசிட் நல்ல சாய்ஸ்!
மாதாமாதம் ஒரு சிறிய தொகையை ரெகரிங் டெபாசிட்டில் போட்டால் அது வளரும் விதத்தைப் பார்த்தால், உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஒரு சிறிய உதாரணம்.. ‘மாதம் 500 ரூபாய் 20 வருடத்திற்கு போட்டு வருவீர்கள்; அது 10 சதவீதம் வட்டி பெறுகிறது’ என்று வைத்துக்கொண்டால், அந்த 20 வருடம் முடிவில் உங்களுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? சுமார் 3,78,000 ரூபாய்-. நம்ப முடிகிறதா? சேமிப்புக்கு ரெகரிங் டெபாசிட் நல்ல சாய்ஸ்!
3. ஆன்லைன் வங்கி வசதியை பயன்படுத்துங்கள்!
பல வங்கிகளில் ஆன்லைன் பாங்கிங் வசதி உள்ளது. அதைப் பெற்றுக்கொண்டு விட்டால் அதன் மூலமாகவே கிரெடிட்கார்டு பில், டெலிபோன் பில், எலக்டிரிசிட்டி பில் போன்ற பல பில்களையும் கட்டிவிடலாம். இதனால், செக் எழுதி அதைக் கொண்டு போய் போட ஆகும் போக்குவரத்து செலவு, கியூவில் நிற்கும் நேரம்.. எல்லாமே மிச்சம்!
4. வங்கிக் கடனில் வாங்குங்கள் வீடு!
வீடு வாங்குவது என்றால், வங்கிக் கடன் பெறுவது நல்லது. அதன் வட்டியின்மீது கிடைக்கும் வருமான வரிச் சலுகையே ஒரு வகையில் பெரிய ஒரு சேமிப்புதான்!
5. மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் அவசியம்!
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் எடுத்திருந்தால் நலம். இல்லாவிடில் கட்டாயம் இன்ஸ்யூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவ இன்ஸ்யூரன்ஸ் இல்லாத பட்சத்தில் இன்றைய சூழலில் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் காலம் காலமாக சேமித்து வைத்திருந்த பணமெல்லாமே காணாமல் போகிவிடும். உஷார்! மேலும், இதற்காக செலுத்தும் இன்ஸ்யூரன்ஸ் பிரிமியம் தொகைக்கு 15,000 ரூபாய் வரை வருமான வரிச் சலுகையும் கிடைக்கும்.
6. கிரெடிட் கார்டில் கவனம் தேவை!
கிரெடிட் கார்டு வைத்திருப்பதால் உள்ள பலன்கள், அதன் டியூ கட்டுவதில் ஒரு முறை தாமதமாகி அபராதம் கட்டினாலே காலியாகி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு செலவுகளை தனியாக எழுதி வைத்து, மாதம் ஒரு முறை அதற்கான தவணை தேதிக்கு முன்னர் கட்டிவிட மறக்கவேண்டாம்.
7. காய்கறி, மளிகை சாமான்கள்..
நமது மாதாந்திர பட்ஜெட்டில் முக்கிய இடம் பெறுவது காய்கறி, மளிகை சாமான்கள் தான். அதில் மிச்சம் பிடித் தாலே நிறைய ரூபாய் சேமிக்க முடியும். சோம்பேறித்தனம் காரணமாக, விலை சிறிது அதிகம் இருந்தாலும் அருகில் உள்ள கடைகளிலேயே காய்கறிகள் வாங்குகிறோம். இதில் தினசரி 3 ரூபாய் கூடுதலாக கொடுக்கிறோம் என்றாலும், வருடத்திற்கு 1. ,080 ரூபாய் நஷ்டம்! இதையே 25 வருடங்களுக்கு வட்டியோடு கணக்கு போட்டால்.. மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வரும். நடந்துசென்று அருகிலுள்ள மார்க்கெட்டில் வாங்கினால் பர்ஸுக்கும் நல்லது. உடம்புக்கும் நல்லது.
8. லிமிடெட் பிக்னிக்!
இன்றைய இளைய தலைமுறை ஒவ்வொரு வார இறுதியிலும் பிக்னிக் செல்வது, அதுவும் தங்களுடைய சொந்த பைக் அல்லது கார்களிலேயே செல்வது வாடிக்கையாகி விட்டது. பிக்னிக் வேண்டாம் என்பதில்லை. வாரம் ஒரு முறை என்பதை மாதம் ஒரு முறை என்று மாற்றிக் கொள்ளலாம். அதுவே நல்ல சேமிப்பை தரும்.
9. நடக்கலாம்..தப்பில்லை!
தற்போது சிறிய தூரத்திற்குகூட ஆட்டோ என்று கூப்பிடும் அளவிற்கு வந்துவிட்டோம். பஸ்சுக்குகூட நிற்பதில்லை. குறைந்த தூரத்திற்கு நடை.. சிறிது அதிகமான தூரத்திற்கு பஸ் என்று பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அதேசமயம், மூன்று பேர் போகும்போது ஆட்டோவில் செல்லலாம். 6 அல்லது 7 பேர் என்றால் கால் டாக்ஸியும் தவறில்லை.
10. பிராண்டட் சட்டையா..?
பெரிய கடைகளில் அட்டைப் பெட்டி களில் மடித்து வைக்கப்பட்டிருக்கும் பிராண்டட் சட்டைகளின் அழகில் அதன் அதிகபட்ச விலையை மறந்து விடுகிறோம். ஏன் கடையில் துணிகள் வாங்கி, தைத்து உடுத்தக் கூடாது. அது பெரிய அளவு சேமிப்பைத் தரும். ரெடிமேட் தான் எடுப்பேன் என்றால், தள்ளுபடி விற்பனைகளை கவனித்து எங்கு நல்ல தள்ளுபடி கிடைக்கிறது என்று பார்த்து வாங்குங்கள் (தள்ளுபடியில் வாங்குவது எல்லாம் மட்டமான சரக்கு என்ற எண்ணம் வேண்டாம். அதிகப்படியான சரக்குகள், தையலில் ஏற்பட்ட சிறிய தவறுகள் போன்று உள்ள ரெடிமேட் ஆடைகள்தான் தள்ளுபடி விற்பனைக்கு பெரும்பாலும் வரும்). தற்போது 50 சதவிகிதம் வரை தள்ளுபடியில் பல கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. அவற்றைத் தேடிப்பிடித்து வாங்குவது உசிதம்.
11. குழந்தைக்கு டிரெஸ் வாங்குகிறீர்களா?
குழந்தைகளுக்கு துணிமணிகள் வாங்கும்போது அவர்களையும் கூட்டிச் சென்று வாங்குவதுதான் உத்தமம். இந்தக் கால குழந்தைகள் முன்பு போல இல்லை. தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் போடவே மாட்டார்கள். எதற்கு அநாவசிய செலவு?
12. கரன்ட் பில் ஷாக் அடிக்குமே!
கரன்ட்டை தொட்டால்கூட பலருக்கு ஷாக் அடிக்காது. மாதா மாதம் கரன்ட் பில் வந்தவுடன்தான் ஷாக் அடிக்கும். தேவையற்ற விளக்குகளை அணைத்து விடுவதே, பெரிய சேமிப்பை தரும். கிராமப் புறங்களில் மாடுகள் வைத்திருப்பவர்கள் கோபர் கேஸ் (சாண எரிவாயு) அமைத்து இன்னும் எரிபொருள் செலவுகளை மிச்சப் படுத்தலாம். ப்ளாட்டுக்களில் குடியிருப்பவர்கள் ‘சூரிய சக்தி’ பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். இவற்றுக்கு அரசாங்க மானியங்களும் கிடைக்கின்றன.
13. டெலிபோன் உபயோகிக்கும்போது..
தற்போது குடும்ப பட்ஜெட்டில் பெரிய ஓட்டை போடுவதில் போன் பில்லுக்கும் பெரும் பங்கு உண்டு. ஆளுக்கு ஒரு மொபைல் போன்.. ஐந்து நிமிடம் தாமதமாக வந்தாலே பத்து போன் கால்கள்.. பில் எகிறாமல் என்ன செய்யும்? போன் செய்யும் முன்பு அந்த கால் அவசியம் தானா என்று யோசியுங்கள். வெளிநாடுகளுக்கு போன் செய்வதாக இருந்தால், இன்டர்நெட் மூலமாக பேசுவது செலவை குறைக்கும். இணைய பரிச்சயம் உள்ளவர்கள் முடிந்த அளவு ஈமெயில் பயன்படுத்தலாம். சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகக் கூறவும் முடியும். செலவும் குறைவு.
14. புதிய ஃபர்னிச்சர் வாங்கப் போகிறீர்களா?
முன்பெல்லாம் வீட்டுக்கு பர்னிச்சர் வாங்குவது என்றால், அது காலா காலத்துக்கும் வரவேண்டும் என்று நினைப்போம். தேக்கு, கருங்காலி, ரோஸ் வுட் என்று பார்த்துப் பார்த்து வாங்கி, அதை நமது ஆசாரி ஒவ்வொரு இழையும், இழைக்கும்போதும் அருகில் இருந்து கவனிப்போம். இந்த வேகமான காலத்தில் நமக்கு ஆசாரி பின்னால் செல்ல நேரம் இல்லை. நமது ஆசாரி என்று சொல்லப் படுபவரும் தற்போது யாருக்கும் இல்லை. குறைந்தபட்சம் அடுத்த ஃபர்னிச்சர் வாங்கும்போதாவது, ‘வாங்கும் ஃபர்னிச்சர் ஐந்து வருடம் உழைத்தாலே போதும்; மறுபடி புதியது வாங்கிக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்தையாவது துறந்துவிட்டு, காலத்திற்கும் உழைக்குமா என்று பார்த்து வாங்குங்கள்.
15. வீட்டு வாடகையில் வருவாய்!
தற்போது போக்கு வரத்து வசதிகள் எவ்வளவோ மேம்படுத்தப்பட்டிருக் கின்றன. அதை வைத்து வீட்டு வாடகையைக் குறைக்கலாமே! சென்னையைப் பொறுத்தவரை, மின்சார ரயில்கள் நகரின் கடைசி வரை இணைக்கின்றன. நகரின் மத்தியில், ரயில் நிலையத் திலிருந்து தள்ளி குடியிருக்கிறீர்கள் என்றால், நகரின் கடைசிக்கு.. ஆனால், ரயில் நிலையத்துக்கு அருகில் வீட்டை மாற்றிக் கொள்வது நல்லது. நகரின் கடைசியில் இருந்தாலும், அந்த வீடு ரயில் நிலையத் திற்கு அருகிலேயே இருப்பதால், போக்கு வரத்து செலவு, பயண நேரம் இரண்டிலும் ஒரே செலவாகத்தான் இருக்கும். ஆனால், அங்கு நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகை குறைவாக இருக்கும். அது எவ்வளவு சேமிப்பை தருமே!
16. கையில் கூடுதலாக பணம் இருக்கிறதா? கடன்களை திருப்பிச் செலுத்துங்கள்!
கையில் அதிகப்படியான பணம் இருக்குமானால் வாங்கிய கடன்களை அடைப்பது நல்லது. கடன்கள் குறைந்தால் மனதில் சுமை குறையும். பணத்தை கையில் வைத்துக் கொள்வது மட்டுமல்ல.. கடனை அதிக வட்டியில் வைத்துக் கொள்வதும் ஆபத்துதானே!
17. விருந்துகள்.. வீட்டில் நடக்கட்டுமே!
‘நண்பர்களுக்கு விருந்து கொடுக்கிறேன்’ என்பது ஒரு பெரிய செலவுதான். பிறந்த நாள், கல்யாண நாள் என்று. ஏன் இவற்றையெல்லாம் வீட்டிலேயே கொண்டாடி மகிழக் கூடாது. வருபவர்களுக்கு ஏன் வீட்டிலேயே சமைத்து பரிமாறக் கூடாது. செலவும் குறைவு. வருபவர்கள் வயிறும் குளிர்ந்து உங்கள் சமையல் திறமையையும் பாராட்டுவார்களே! அதோடு, அலுவலகத்துக்கு செல்லும்போது கையில் ‘லன்ச்’ கொண்டு செல்லுங்கள். ‘வெளியில் சாப்பிட்டுக்கறேன்’ என்று போனால், அது பெரிய அளவில் செலவை இழுத்துவிடும் ஆபத்து இருக்கிறது.
18. வெஜிடேரியனா? நான்&வெஜிடேரியனா?
‘நான்&-வெஜிடேரியன்’ என்றால் வெஜிடேரியனுக்கே மாறிவிடுவது சேமிப்புக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. மாற முடியாதவர்கள் வாரம் ஒருமுறை தான் ‘நான்-வெஜ்’ என்று ஒரு எல்லை வைத்துக் கொள்ளலாம்.
19. தவிர்க்க முடியாத பள்ளிக் கட்டணம்!
பிள்ளைகளின் பள்ளிக் கட்டணங்கள் தவிர்க்க முடியாதவைதான். உங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து, அங்கே கட்டணங்கள் அதிகரித்து வரும் வேளையில், பெற்றோர் ஆசிரியர் கழக மீட்டிங்குகளில் அந்தக் கட்டண உயர்வு பற்றி கூற மறக்காதீர்கள். அது அந்த நிர்வாகத்தை ‘இரண்டு பேர் கேள்வி கேட்கிறார்களே’ என்று கவனிக்க வைக்கும். கட்டணங்களை கூட்டும் முன்பு சிறிதாவது யோசிப்பார்கள்.
20. கடன் வாங்கி முதலீடா?
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய என பலர் கடன் வாங்குகிறார்கள். தற்போது உலகளவில் பொருளாதார சூழ்நிலை சரியில்லாததால் கடன் வாங்கி முதலீடு செய்வது அத்தனை உகந்ததல்ல.
21. டியூசன் எடுக்கலாமா?
சில இல்லத்தரசிகள் நன்கு படித்து வேலை பார்க்காமல் இருக்கலாம். டியூசன் எடுப்பது அவர்களுக்கு ஒரு நல்ல பார்ட் டைம் வேலை! பெரிய நகரங்களில் சப்ஜெக்ட் வாரியாகவே டியூசன் எடுக்கிறார்கள். எந்த சப்ஜெட்டில் உங்கள் நீங்கள் திறமைசாலியோ அந்த சப்ஜெட்டை எடுக்கலாம். டியூஷன்தான் என்றில்லை.. பொழுதுபோக்காக நீங்கள் கற்று வைத்திருக்கும் விஷயங்களை அசைபோட்டு பாருங்கள்.. அதிலேயே கூட அட்டகாசமான வருவாய் தரும் சூட்சுமம் ஒளிந்திருக்கும்.
22. குழந்தைகளுக்கு சேமிப்பை கற்றுக் கொடுங்கள்!
நீங்கள் சேமிப்பதோடு உங்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியதும் முக்கியம். அவர்களுக்கு மாதாமாதம் தேவையான அளவு பணம் கொடுத்து அவர்களின் செலவுகளை அவர்களையே செய்துவரச் சொல்லுங்கள். இது நிச்சயமாக நல்ல பலன்களை தரும். நீங்கள் அசந்துபோகும் அளவுக்கு நிறைய சேர்த்து வைத்திருப்பார்கள்!
23. அடுத்தவர் என்ன நினைப்பார்?
அடுத்தவர் என்ன நினைப்பார் என்ற நினைப்பிலே நாம் பெரும்பாலும் அதிகம் செலவழிக்கிறோம். அதைத் தவிர்த்தாலே ஒரு பெரிய சேமிப்பு ஏற்படும்.
24. செலவு செய்யும் முன்பு ஒரு நிமிடம் யோசியுங்கள்!
எந்த செலவையும் செய்யும் முன்பு ‘இது தேவையான செலவுதானா?’ என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். தேவைப்படாத எந்த ஒருபொருளையும் மிகமிக குறைந்த விலையில் கிடைத்தாலும் வாங்காதீர்க்ள். அதேபோல், எந்த ஒரு செலவிலுமே நம் தேவைக்கு சிறிதும் குறைவு வைக்காத.. ஆனால் சேமிப்பை தரும் விஷயங்கள் இருக்கின்றன. கவனித்து செயல்படப் பாருங்கள்!
25. கிரியேட்டிவ்&ஆக இருங்கள்!
எந்த ஒரு விஷயத்திலும் கிரியேட்டிவ்வாக இருப்பதே ஒரு வகையில் சேமிப்பைத் தரும். ‘அவுட்டிங்’ போவதற்கு பதிலாக வீட்டிலேயே குடும்பத்தினரோடு புதுமையான ‘இன்டோர்’ கேம்ஸ் விளையாடுவது, எல்லாவற்றையும் குப்பை என வெளியே தள்ளாமல் அதில் பயன்படுத்த வழிகள் பார்ப்பது.. இவற்றாலும் வீட்டில் பணம் செழிக்கும்.
-சேதுராமன் சாத்தப்பன்