Jul 5, 2010

சசிகலா - தெரியாத நிஜம்


ஜெயலலிதாவின் உயிர்த்தோழி..

- சசிகலாவுக்கு காலத்துக்கும் மாறாத கௌரவ அடையாளம் இது. மற்றபடி, சசிகலா எப்படி? அவருக்குப் பிடித்த & பிடிக்காத விஷயங்கள் என்ன? அவற்றையெல்லாம் எந்தக் கணத்திலும் அவர் சொன்னதில்லை. யாரும் (தைரியத்தோடு) கேட்டதும் இல்லை. சசிகலா என்கிற பெயரைத் தவிர பிரத்யேக விஷயங்கள் அத்தனையுமே பரம ரகசியம்தான்.

சசிகலாவின் பிறந்த ஊரான திருத்துறைப் பூண்டி வடக்குச் செட்டித் தெருவை தேடிப்போய் பேச்சு கொடுத்தால்.. நம் ‘மல்லிகை மகளை’ அட்டை டூ அட்டை புரட்டிவிட்டுத் தான் வாய் திறக்கிறார்கள். அவ்வளவு ஜாக்கிரதை!

‘‘இந்த மண்ணுல பொறந்த மகராசி, மாரியம்மா புண்ணியத்துல நினைச்சுப் பார்க்க முடியாத உசரத்துக்கு போயிட்டாங்க. ஆனா, ‘பவர்’ல இருந்தாலும் இல்லாட்டியும் பொறந்த மண்ணையும் தன்னோட இந்த சொந்தங்களையும் மறக்கவே மாட்டாங்க. பங்குனி மாச உற்சவம் வந்துட்டாலே மகா மாரியம்மனைக் கும்பிட வருஷம் தவறாமல் வந்திடுவாங்க.. மதுரை வீரன்தான் அவங்க குலசாமி. ஆனாலும், இங்கே இருக்கிற மகா மாரியம்மன்தான் அவங்களுக்கு இஷ்ட தெய்வம். ஆரம்ப காலத்தில் பெரிசா வசதி இல்லாத குடும்பம். அதனாலேயே நல்ல படிப்பு படிக்கக்கூட நாலு பேரோட உதவி ஒத்தாசையை எதிர்பார்க்கவேண்டிய நிலை. அதெல்லாம் தடாலடியா மாறினதே இந்த மகா மாரியம்மனோட புண்ணியத்தால தான்னு இன்னிக்கும் நம்புறவங்க அவங்க. படியளந்த தெய்வத்துக்கு பெரிசா கோயில் கட்டி ஜெயலலிதாம்மாவையே அழைச்சுக் கிட்டு வந்து திருவிழா கொண்டாடினாங்க.. அப்போ ஜெயலலிதாம்மா இந்தக் கோயிலுக்கு வெள்ளிக்கவசம் உபயம் கொடுத்தாங்க.

இப்பல்லாம் எப்பவாவதுதான் சசியம்மாவால ஊருக்கு வரமுடியுது. அந்த சமயத்துல யாரு என்ன உதவி கேட்டாலும், ‘செய்யறேன்’ ‘செய்யலை’னு எந்த பதிலும் சொல்ல மாட்டாங்க. ஆனா, அவங்க கிளம்பிப் போன பின்னாலேயே ‘அம்மா அனுப்பினாங்க’னு யாராச்சும் ஒருத்தர் வந்து, உதவி கேட்டவங்களுக்கு உரியதை செஞ்சுட்டு போவார். அந்தளவுக்கு எதையுமே வெளிக்காட்டிக்காத ஆளு அவங்க..’’ - அந்த செட்டித் தெருவே சிலிர்க்கிறது.

‘‘என் பேரைப் போட்டுடாதீங்க.. சசியம்மாவுக்கு என்னைய நல்லா தெரியும்..’’ என்றபடியே சசிகலாவின் பள்ளிக்கால நிகழ்வு ஒன்றை சொன்னார் ஒரு பெண்மணி.

‘‘திருத்துறைப்பூண்டியில் இப்பவும் இருக்கற போர்டு ஹைஸ்கூல்லதான் சசியம்மா படிச்சாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க.. சின்ன வயசுல அவங்க ரொம்ப பயந்த சுபாவம். யாரும் சாதாரணமா திட்டினாக்கூட ‘ஓ..’ன்னு அழுதுடுவாங்க. ஒரு தடவை ஸ்கூல்ல நடந்த ஓட்டப்பந்தயத்துல கலந்துகிட்டு ரெண்டாவது பரிசு வாங்கினாங்க. இந்த விஷயம் அவங்க வீட்டுக்கு எப்படியோ தெரிஞ்சுப் போச்சு. அப்புறமென்ன.. ‘வயசுக்கு வந்த பொண்ணு.. கால் தூக்கி ஓடுறதா’னு கேட்டு, ஒரு நாள் முழுக்க வீட்ல முட்டிப் போட வெச்சுட்டாங்க..’’ சிரிப்பு தாளாமல் சிரித்தார் அந்தப் பெண்மணி.

‘‘ஓட்டப்பந்தயத்தில மட்டுமில்லை.. மாணவர் மன்றம் நடத்துற இலக்கிய விழாக்களிலுமே சசிகலாவின் பங்களிப்பு தவறாமல் இருக்கும்’’ என்றபடி தொடர்கிறார் சசிகலாவின் பள்ளி சீனியரான அப்பாத்துரை.

‘‘இங்கிலீஷ் மருந்துக்கார வீடுனு சொன்னாத்தான் சசிகலா வீடு தெரியும். ஆரம்பத்தில் சந்திரசேகரன் பிள்ளைதான் திருத்துறைப்பூண்டி ஏரியாவுலயே இங்கிலீஷ் மருந்துக்கடை நடத்தியவர். அவரோட பையன்தான் விவேகானந்தன். இவருக்கு நாலு பையன், ரென்டு பொண்ணு. அதில மூத்த பொண்ணுதான் சசி. பந்த பாசத்துக்கு பஞ்சமில்லாத குடும்பம். ஆரம்பத்தில் செட்டித் தெருவில இருந்த புகையிலைக் கடைக்கார செட்டியார் வீட்டுலதான் சசிகலா ரொம்பப் பிரியமா இருப்பாங்க. சின்ன வயசு பிரியம் மாறாம இன்னிக்கும் அந்த செட்டியார் குடும்பத்தில் என்ன ஒரு விஷயம்னாலும் முதல் ஆளா ஆஜராகிடுவாங்க. கோயில் விசேஷத்துக்கு சசி வந்திருப்ப, ‘நம்மள எல்லாம் ஞாபகம் இருக்கோ இல்லியோ’னு நினைச்சு, ஒரு ஓரமா நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனா, முகத்தைப் பார்த்த உடனேயே ‘அண்ணே..’னு அவ்வளவு ஆசையா கூப்பிட்டாங்க. அப்படி பழசை மறக்காத மனசு அவங்களோடது!

எட்டாவது வரைக்கும் இங்கே படிச்ச சசி, அதுக்கப்புறம் மன்னார்குடிக்கு போயிட்டாங்க. அண்ணன்கள் தலையெடுத்த பிறகு அவங்க குடும்பம் ஓஹோனு முன்னேறிடுச்சு. அதுக்கப்புறம்தான் சசிக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இன்னிக்கும் அவங்க குடும்பத்துல என்ன விசேஷம் நடந்தாலும் யாருக்கு அழைப்பு போகுதோ இல்லையோ எங்களை மாதிரியான பொறந்த ஊர் ஆளுங்களுக்கு அவசியம் அழைப்பு வந்துடும்...’’ பெருமையோடு சொல்கிறார் அப்பாதுரை.

சந்தானகிருஷ்ணன், சசிகலாவுக்கு உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தவர். அவர், ‘‘படிக்கிற காலத்திலேயே சசி ரொம்ப அமைதியான பொண்ணு. சுந்தரவதனம், வினோதகன், ஜெயராமன், திவாகரன்னு நாலு அண்ணன் தம்பிகளும் சசியை கண்ணுக்குள்ள வச்சுதான் பார்த்துக்கிட்டாங்கனு சொல்லணும். கண்டிப்பும் அந்த மாதிரி இருக்கும். பாசமும் அந்த மாதிரி இருக்கும். ஊர்ப்பக்கம் வர்றப்ப சித்தப்பா, பெரியப்பா, மாமானு எல்லா சமுதாய ஆட்களையும் உறவுமுறை சொல்லித்தான் சசி அழைப்பாங்க.

எனக்கு விவரம் தெரிஞ்சு அவங்க ஆறாவதோ ஏழாவதோ படிச்சப்ப, ஏதோவொரு வேஷம் போட்டு பள்ளிக்கூட நாடகத்துல நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல ஆர்வம் அதிகம். இருந்தாலும், வீட்டுக்குப் பயந்து படிப்பில் மட்டுமே தீவிரம் காட்டினாங்க.

இப்போ அடிக்கடி ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு பிஸியாகிட்டாங்க. ஆனாலும், யார் மூலமாவது ஊர்ல நடக்கிற நல்லது கெட்டதுகளைப் பற்றி தெளிவா தெரிஞ்சுக்குவாங்க. சம்பந்தப்பட்ட விசேஷ வீடுகளுக்கு சர்ப்ரைசா வந்து கதவைத் தட்டி, அவங்களை திக்குமுக்காட வெச்சிடுவாங்க.

பள்ளியில படிக்கறப்ப, அவங்ககிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயம்னா, மத்தவங்களை ஆத்மார்த்தமா மதிக்கிற குணம்தான். இன்னிக்கும் மத்தவங்களை மதிக்கிற குணத்தை அவங்க கைவிட்டுடலை. அதேமாதிரி, இந்த ஊர் மேலயும் உறவுங்க மேலயும் அவங்க வெச்சிருக்கிற வாஞ்சையும் குறையலை..’’ என்கிறார் வியப்பு மேலிட!

- நமது நிருபர்

Jul 2, 2010

மல்லிகை மகள் - ౩-ம் ஆண்டு சிறப்பிதழ்


உங்கள் மல்லிகை மகளுக்கு மூன்று வயது நிறைகிறது. தாய்மை உணர்வு பொங்கும் வாசகர்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளாலும் அவள் உள்ளம் பூரித்து நிற்கிறாள்.

இந்த சிறப்பிதழில் பல்வேறு புதிய அம்சங்கள்.. கூடுதல் பக்கங்களில் மலர்ந்திருக்கின்றன.

உங்களின் ஆதரவுக்கு உளப்பூர்வமான நன்றி!

சுப வரம் - ஜூலை இதழ்


Mar 31, 2010

மல்லிகை மகள் & சுப வரம் - ஏப்ரல் இதழ்கள்




மல்லிகை மகள் மற்றும் சுப வரம் ஏப்ரல் இதழ்கள்.. இப்போது விற்பனையில்!

Feb 12, 2010

ஒரு திடுக் காதல் கதை


துறுதுறுவென டீன் ஏஜ் பெண் போல இருக்கிறார் சாந்த்ரா. திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஓடியும், இன்னும் அந்தக் குழந்தைத்தனம் மாறவில்லை. வார்த்தைக்கு வார்த்தை ‘அச்சு’ புராணம்தான். அப்படித்தான் தன் காதல் கணவர் பிரஜினை அழைக்கிறார்.

பிரஜினும் அப்படித்தான். எது பேசினாலும் ‘மாலுக்குட்டி’ (சாந்த்ராவுக்கு அவர் வைத்திருக்கும் செல்லப் பெயர்)&யில் ஆரம்பித்து, மாலுக்குட்டியிலேயே முடிகிறது.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ளடங்கிய ஒரு அபார்ட்மென்ட்டில், அழகிய சிறிய ஃப்ளாட்டில் தனிக்குடித்தனம். தம்பதிக்கு கம்பெனி கொடுக்க ஜென்னி, சுப்பிரமணி என்று இரண்டு நாய்க்குட்டிகள்.

‘‘எங்களால பிப்ரவரி மாதத்தை மறக்கவே முடியாது.. ரெண்டு வருஷத் துக்கு முன்னால, எங்க கல்யாணத்துக்கு அங்கீகாரம் கிடைச்சு, ரிசப்ஷன் நடந்தது இதே காதல் மாசத்தில்தான்..’’ என்று பேச ஆரம்பிக்கிறார் சாந்த்ரா. ‘அங்கீகாரம் கிடைச்சு’ என்று சுலபமாகச் சொல்லி விட்டாலும், அதற்குப் பின்னிருக்கும் வலிகளும் வேதனைகளும் எக்கச்சக்கம்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவனந்தபுரம்.. அப்பா, அம்மாவுக்கு ஒரே பொண்ணு.. ஆனா, அவங்க துபாய்ல இருந்ததால, படிக்கிறதுக்காக நான் எங்க அத்தைகிட்ட வளர்ந்தேன். லீவுல மட்டும் துபாய் போவேன்.சின்ன வயசிலேயே நிறைய மலையாளப் படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன்.. ப்ளஸ் டூ படிக்கிறப்பதான் ‘கிரண் மியூஸிக்’ சேனல்ல காம்பியரிங் பண்ற வாய்ப்பு கிடைச்சது. அப்போதான் ‘சன் மியூஸிக்’ல பிரஜினோட ப்ரோகிராம் பார்த்தேன்.. அவர் பேசுற விதம், ஸ்டைல் எல்லாம் பார்த்து அவரோட ஃபேன் ஆயிட்டேன்.

அந்தச் சமயத்தில டி.வி. காம்பியரர்ஸ் சிலரை வச்சு ஒரு பத்திரிகையில பேட்டிக்கு ஏற்பாடு பண்ணினாங்க. அதுக்காகத்தான் நான் முதன்முதல்ல பிரஜின்கூட பேசினேன். அப்புறம் அடிக்கடி பேசி நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். ஆனா, நாங்க எந்த பேட்டிக்காக அறிமுகம் ஆனோமோ, அது அப்புறம் வரவே இல்லைங்கறது வேற விஷயம்...!’’ என்று சொல்லி, காசை சுண்டிவிட்டதுபோல கலகலவென சிரிக்கிறார் சாந்த்ரா.

மனைவியின் சிரிப்பழகை ரசித்துக் கொண்டிருந்த பிரஜின், ‘‘பழக ஆரம்பிச்ச ஒரே மாசத்திலேயே ரெண்டு பேருக்கும் ‘இது வெறும் நட்பு மட்டுமில்ல’னு புரிஞ்சு போச்சு! டக்னு ஒருநாள் சாந்த்ரா தன்னோட லவ்வை ப்ரபோஸ் பண்ணினாங்க. நான் சொன்னேன்.. ‘இது லைஃப் சம்பந்தப் பட்ட விஷயம்.. எனக்கு ஒரு ஆறு மாசம் டைம் கொடு.. இது சரிப்பட்டு வருமானு நல்லா யோசிச்சுட்டு சொல்றேன்’னு சொன்னேன்..’’ என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இடைமறித்த சாந்த்ரா, ‘‘அப்படித்தான் சொன்னார்.. ஆனா, அன்னிக்கு சாயந்திரமே போன் பண்ணி, தன்னோட காதலை சொல்லிட்டாரு.. ஆறு மாசம் டைம் கேட்டவருக்கு ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியல..’’ என்கிறார் சிரிப்புக்கிடையில்.

‘‘சாந்த்ரா கிறிஸ்டியன்.. நான் இந்து! ரெண்டு குடும்பமும் ரொம்ப ஆர்தடாக்ஸ்.. அதனால ரெண்டு பேரும் மூச்சே விடாம ரகசியமா காதலிச்சோம்.. 2005&ல ஆரம்பிச்சு, 2007&ல எங்க கல்யாணம் நடக்கற வரைக்கும் ரெண்டரை வருஷத்துக்கு நாங்க பார்த்துக்கவே இல்ல..’’ என்று பிரஜின் சொல்ல..
‘‘ஆமா.. ரெண்டு பேரும் டி.வி.ல பார்த்துக்கறதோட சரி! மத்தபடி போன்தான்! ரெண்டு பேருமே மீடியாவில் பாப்புலர்ங்கறதால, அவர் கேரளாவுக்கு வந்து பார்த்தா யாருக்காவது தெரிஞ்சிடும்னு அவரும் வரமாட்டார்.. எனக்கு தனியா சென்னையெல்லாம் வந்து பழக்கமே இல்லை.. அதனால நானும் வரமுடியாது.. ப்ச்.. ஆனாலும், நாங்க ரொம்பப் பாவம்!’’ என்று ‘உச்சு’ கொட்டுகிறார் சாந்த்ரா.

‘‘அம்மா, அப்பாகிட்ட எப்படி மேட்டரை ஓப்பன் பண்றதுன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. மெதுவா, ரெண்டு வீட்டிலேயும் பேசி அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம்கிறதுதான் எங்க பிளான்.. ஆனா, நடந்ததோ வேற!’’ என்று வருத்தமாக சாந்த்ரா பெருமூச்சுவிட.. தொடர்கிறார் பிரஜின்.

'‘சாந்த்ரா வீட்டுல என்னைப் பத்தி சொன்னதும் ரொம்பக் கோபமாயிட்டாங்க அவங்க பேரன்ட்ஸ்! வேற இடத்தில் அவசரமா கல்யாணம் பண்றதுக்கு முயற்சி வேகமா நடந்தது. அதேசமயம், எங்க வீட்ல யும் விஷயம் தெரிஞ்சு வெடிச்சது பூகம்பம்.. ‘கிறிஸ்டியன் பொண்ணா.. முடியவே முடியாது’னு உறுதியா சொல்ல.. என்ன பண்றதுனு ரொம்ப குழம்பிட்டோம். அப்புறம் திடமா முடிவெடுத்து, ‘நம்ம காதல் உறுதியானதுன்னா அது நம்மைச் சேர்த்து வைக்கட்டும்.. நீ கிளம்பி சென்னை வந்துடு’னு சொல்லிட்டேன். இவங் களும் வந்துட்டாங்க.ஈஸியா சொல்லிட் டேனே தவிர, இங்க வந்தப்புறம் சாந்த்ரா அனுபவிச்ச தனிமையும் கொடுமையும் இருக்கே.. அது எங்க காதலுக்கான அக்னிப் பிரவேசம்தான்!’’ என்றார் பிரஜின்.

‘‘நான் சென்னை வந்துட்டேனே தவிர, இங்கே எனக்கு யாரையுமே தெரியாது. பிரஜின்தான் எனக்கு ரொம்ப தைரியம் சொல்லி, ஒரு வுமன்ஸ் ஹாஸ்டல்ல தங்க வச்சார்.. சென்னையில் கல்யாணம் பண்ணினா மீடியா மூலமா எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னு, திருச்சியில இருக்கிற பிரஜினோட ஃப்ரெண்ட் ஃபேமிலிகிட்டே போய்த் தஞ்சம் புகுந்தோம். நாங்க வேற வேற மதம்கிறதால உடனடியா ரிஜிஸ்டர்டு மேரேஜ் பண்ண முடியாதுனு சொல்லி, திருவாரூர் சிவன் கோயில்ல வச்சு, இந்து முறைப்படி கல்யாணம் நடந்தது.கல்யாணம் முடிஞ்சபிறகு, திரும்பவும் சென்னையில ஹாஸ்டல் வாசம்.. முடிஞ்சப்போ எப்பவாவது வந்து பார்ப்பார்.. எங்க ஐடியா என்னன்னா, வீட்ல இருக்கற வங்ககிட்ட கல்யாணம் ஆன விஷயத்தைச் சொல்லி எப்படியாவது சமாதானப்படுத்திடலாம்கிறதுதான்! புது சூழ்நிலை, புது மனுஷங்க, பழக்கமில்லாத சாப்பாடு, கிளைமேட்னு எல்லாம் சேர்ந்துகிட்டு என் மனசும் உடம்பும் ரொம்பவே சோர்ந்து போய், டைபாய்டு காய்ச்சல் வந்துடுச்சு! பார்த்துக்கிறதுக்கு யாரும் இல்ல.. பிரஜின்தான் என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி, பார்த்துகிட்டார். உடம்பு கொஞ்சம் தேறி ஹாஸ்டலுக்கே வந்தேன்.. ஹாஸ்டல்ல எல்லாரும் உண்மை தெரியாம, ‘உங்க ஊருக்குப் போயிடு.. உடம்பு தேறினதும் வா’ன்னாங்க! நான் யார் வீட்டுக்குப் போறது?

அந்தச் சமயம் பார்த்து பிரஜின் ‘காதலிக்க நேரமில்லை’ சீரியலுக்காக, சிங்கப்பூர் போக வேண்டியதாயிடுச்சு.. ஹாஸ்டல்ல ஒவ்வொருத்தருக்கா விஷயம் தெரிஞ்சு என்னை கேக்க ஆரம்பிச்சிட்டாங்க! இது போதாதுனு, எங்க வீட்ல வேற, என்னைக் காணோம்னதும், தேடிக்கிட்டு நேரா பிரஜின் வீட்டுக்கு வந்துட்டாங்க.. டென்ஷனான பிரஜினோட பேரன்ட்ஸ், என்னையும் அவர் சிங்கப்பூர் கூட்டிக்கிட்டுப் போய்ட்டார்னு நினைச்சு அவருக்கு போன் போட்டு கோபமா கேட்க.. வேற வழியில்லாம பிரஜின் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டார்.. ஆத்திரத்துல, எங்க வீட்லருந்து வந்தவங்க, அப்படியே திரும்பி ஊருக்குப் போய்ட்டாங்க!

என் மாமியார் உடனே கிளம்பி வந்துட்டாங்க என்னைப் பார்க்கறதுக்கு! என்னைப் பார்த்ததும் அவங்க கொஞ்சம் சமாதானம் ஆனாங்க..’’ - கோர்வையாக சொல்லிக் கொண்டே வந்த சாந்த்ரா நிறுத்தவும், விறுவிறுப்பான காதல் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது ‘இடைவேளை’ விட்ட உணர்வு நமக்கு.

தொடர்ந்த பிரஜின், ‘‘அப்புறம், எல்லாப் பிரச்னை களையும் ஒரு மாதிரியா சமாளிச்சு, 2008, பிப்ரவரில ஊரறிய எங்க ரிசப்ஷன் நடந்தது. அதுக்கப்புறம் எங்க வீட்டு மருமகளா சாந்த்ரா வீட்டுக்குள்ள அடியெடுத்து வச்ச நாள், மறக்க முடியாதது! நடிக்கிறது, காம்பியரிங் எல்லாத்தையும் விட்டுட்டு, முழுநேர இல்லத்தரசியா, மாமியார் சொல் கேட்கிற மருமகளா மாறினாங்க! நாலஞ்சு மாசத்தில சாந்த்ராவுக்கு சீரியல்களில் நடிக்கிற வாய்ப்பு வரவே, நாங்க தனிக்குடித்தனம் வர வேண்டியதாயிடுச்சு! இப்ப நான் சினிமாவுல என்ட்ரி ஆயிட்டேன். இவங்களும் சீரியல், கேம் ஷோ, டான்ஸ் ஷோனு பண்ணிட்டிருக்காங்க.. எங்களுக்கு துணைக்கு இந்த குட்டீஸ்! லைஃப் இஸ் கோயிங் ஸ்மூத்லி!’’ என்று முடிக்கிறார்.

‘‘இப்பவாவது உங்க அம்மா, அப்பா சமாதானம் ஆனாங்களா, இல்லையா?’’ என்றோம் சாந்த்ராவிடம். ‘‘அம்மா போன வருஷம்தான் சமாதானம் ஆகி, கொஞ்ச நாள் முன்னால இங்கே வந்து என் கூட பத்து நாள் தங்கிட்டுப் போனாங்க.. அப்பாவுக்கு இன்னும் கோபமும் வருத்தமும் இருக்கு.. நாளாக ஆக சரியாயிடும்னு நம்பறேன். ஏன்னா, பிரஜின் அவ்வளவு நல்ல சாய்ஸ்! எங்கம்மா அப்பா பார்த்துக் கல்யாணம் பண்ணி இருந்தாகூட நான் இவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பேனானு சொல்ல முடியல.. ரெண்டரை வருஷம் பார்த்துக்காமலேயே பழகினாலும் கூட எங்க ரெண்டு பேரோட, ப்ளஸ், மைனஸ் எங்க ரெண்டு பேருக்குமே நல்லாத் தெரியும்! அதனால, ஈகோ பிரச்னை, பொசஸிவ்நெஸ்னு தம்பதிகளுக்குள்ள பொதுவா வர்ற பிரச்னைகள்கூட எங்களுக்குள்ள வர்றதில்ல.. அப்படிப் பிரச்னை வந்தாலும் எங்களுக்குள்ள அஞ்சு நிமிஷத்துக்கு மேல நிக்கிறதில்ல.. என்ன சண்டை வந்தாலும், அதை ஆரம்பிச்சவங்க அஞ்சு நிமிஷத்துக்குள்ள அதை முடிச்சிடணும்னு எங்களுக்குள்ள அக்ரிமென்ட்டே இருக்கு! அதனால, அபூர்வமா எங்களுக்குள்ள வர்ற சண்டைகளுக்கும் ஆயுசு அஞ்சு நிமிஷம்தான்!’’ - மென்மையான புன்னகைப் பூ சாந்த்ராவிடம்.

‘‘முன்னெல்லாம் எனக்கு நிறைய கோபம் வரும்.. இப்ப, சாந்த்ராவால அது படிப்படியாக் குறைஞ்சு, பக்குவப்பட்டு, நல்லா மோல்டு ஆயிட்டேன்! ஆனா, சாந்த்ராவுக்கு உடம்புதான் இன்னும் ‘செட்டில்’ ஆகல.. கொஞ்சம் ஸ்ட்ரெயின் பண்ணாலும் உடம்புக்கு முடியாம போயிடும். சமீபத்துலகூட ஜாண்டிஸ் வந்து ரொம்ப கஷ்டப் பட்டாங்க..’’ என்று கரிசனமாக பிரஜின் குறிப்பிட..‘‘இவருக்கு டெய்லி சாப்பாட்டுல நான்&வெஜ் இருக்கணும். ஆனா, எனக்கு ஜாண்டிஸ் வந்திருந்தப்ப ரெண்டு மாசமும் எனக்காக, நான் சாப்பிட்ட பத்தியச் சாப்பாட்டையே சாப்பிட்டுக்கிட்டு இருந்த அந்த அன்பே.. என்னை சீக்கிரம் குணப்படுத்திடுச்சு!‘‘ - சாந்த்ராவின் குரலில் நெகிழ்ச்சி!

‘‘எதிர்காலக் கனவு...?’’ என்று இருவரையும் பார்த்துப் பொதுவாக வினவ..
‘‘நல்ல படங்கள்ல நடிச்சு, சம்பாதிச்சு சாந்த்ராவுக்கு அழகான வீடு ஒண்ணு கட்டித் தரணும்.. குழந்தை பெத்துக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆகணும்.. அதான் என் கனவு!’’ என்கிறார் பிரஜின்.

குறும்பாகப் பார்த்த சாந்த்ரா, ‘‘எனக்கு ஒரே ஒரு ‘லவ் சப்ஜெக்ட்’ படம் நடிக்கணும்.. அதுவும் இவர் கூட நடிக்கணும். அவ்வளவுதான்!’’ என்கிறார்.
‘‘இடையில் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டதா செய்தி வந்ததே!’’ என்று நாம் தயங்கியபடி கேட்க..பளிச் பதில் வருகிறது சாந்த்ராவிடமிருந்து.
‘‘அது நான் ஹாஸ்டல்லயும் இவர் வீட்லயும் இருந்தப்போ கேள்விப்பட்ட செய்தியா இருக்கும்.. ஆனா, அந்த செய்தி பத்திரிகைகள்ல வந்தப்போ நாங்க இந்த வீட்ல சந்தோஷமா குடித்தனம் பண்ணிட்டிருந்தோம்.. அதையெல்லாம் கண்டுக்கிற மூடுல கூட இல்ல..!’’ என்று சொல்லும் சாந்த்ரா, காதல் காலத்தில் பிரஜின் அனுப்பிய முதல் பரிசான நீல நிறப் புடவை, டெடி பியர், திருமணம் ஆனதும் முதன்முதலாக பீச்சுக்கு அழைத்துச் சென்றபோது வாங்கித் தந்த மல்லிகைப் பூ.. என பல காதல் பரிசுகளை பத்திரமாக பாதுகாக்கிறார்.

‘‘உங்களோட நீண்ட காதல் கதையில மறக்கமுடியாத தருணம்?’’
‘‘எனக்காக ஹாஸ்டல்ல தங்கி சாந்த்ரா பட்ட கஷ்டம்தான் என்னால மறக்கவே முடியாத விஷயம்.. வீட்டுல என்னால இயல்பாவே இருக்க முடியாது.. நான் வீட்டுல சாப்பிடறப்போ, ‘அய்யோ.. மாலு இப்போ ஹாஸ்டல் சாப்பாடை சாப்பிட்டுட்டிருக்குமே’ங்கிற நினைப்பே ரொம்ப டிஸ்டர்ப் பண்ணும். ‘நல்லா வளர்ந்த பொண்ணு.. நம்மால இப்படிக் கஷ்டப்படுதே’னு நினைச்சு மனசு பதறும்.. சாப்பிடவே தோணாது.. வெளில கூட்டிட்டுப் போய் வாங்கித் தரவும் முடியாது. அது நரக வேதனை!’’ என்று குரல் கம்மப் பேசிய பிரஜின், சில விநாடிகளில் பிரகாசமாகி, ‘‘அப்பா, அம்மாவை விட்டுட்டு வந்த பொண்ணு, நாம நல்லா வச்சுக்கணுமேன்னு ஒவ்வொரு நிமிஷமும் உள்ளுக்குள்ள ஓடிட்டே இருக்கும்! என் மனைவியை சந்தோஷமா வச்சுக்கணும்.. எல்லாரும் பொறாமைப்படற மாதிரி நாங்க வாழ்ந்து காண்பிக்கணும்’’ என்கிறார் அழுத்தமாக.

வாழவைத்த காதலுக்கு ஜே!

- மித்ரா, படங்கள்: சந்துரு