வணக்கம் வாசகர்களே.. தற்போது வெளியாகியுள்ள 'மல்லிகை மகள்' டிசம்பர் இதழிலிருந்து ஒரு கட்டுரை..
நொடிக்கு நொடி ராணுவத்தின் யுத்த பசிக்கு இலக்காகும் ஈழத்தில் தாயை விட்டுவிட்டு தவிக்கும் ஒரு தமிழனின் மனக்குமுறல்.. அந்த வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது.
நொடிக்கு நொடி ராணுவத்தின் யுத்த பசிக்கு இலக்காகும் ஈழத்தில் தாயை விட்டுவிட்டு தவிக்கும் ஒரு தமிழனின் மனக்குமுறல்.. அந்த வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது.
இந்த வரிகளை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் கணத்தில் ஒரு குண்டு வீழ்ந்து வெடிக்கும். நாய்கள் குரைத்தபடி வெறிபிடித்து ஓட.. மக்கள் வெளியேறிக் கொண்டிருப்பர். தான் ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலை விட்டு வலுக்கட்டாயமாக ஒரு சிறுபெண் அம்மாவுடன் பதுங்கு குழிக்குள் ஓடுவாள்.. அல்லது, ஊஞ்சல் தன் ஊசலை நிறுத்துவதற்கிடையில் அவள் தன் ஊரை விட்டு வெகுதூரம் ஓடி வந்திருப்பாள். அடுத்த ஊரைக் கடப்பதற்கிடையில் அவளது அம்மாவையும் குண்டுகள் பறித்து அவளை அனாதையாக்கிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நிச்சயமற்ற கணங்களின் கூடாரமாகிவிட்டது ஈழம்! அடுத்த நாள் பற்றி அல்ல.. அடுத்த மணிநேரம் பற்றிய நிச்சயமின்மைகளில் துடித்துக்கொண்டிருக்கிறது மனிதம். பதுங்கு குழிகள் உயிர்பெற்று விட்டன. அதற்குள் உயிரை அஞ்சியபடி நடுங்கிக் கிடக்கின்றன குழந்தைகள். அதனுள்ளே.. எனக்கு என் தங்கையின் நினைவுகள் எழுந்தன.
அவளுக்கு நான்கு வயதாயிருக்கும்போது எங்கள் வீட்டின் மேல் நான்கு குண்டுகளை அரசபடையின் விமானங்கள் வீசின. அவள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்று வரைக்கும் மீளவேயில்லை. விமானம் போன்ற ஏதாவது ஒரு சிறு இரைச்சல் எழுந்தால்கூட அவள் அலறி அடித்தபடி பதுங்கு குழிக்கு ஓடுபவளாக இருந்தாள். இந்த உலகத்தில் அவளுக்கிருக்கும் ஒரே அச்சம் விமானங்கள்தான்! பின்பொரு நாள், அவளுக்கு திருமணமாகி, லண்டனுக்கு விமானம் ஏறும்போது தனது கையை விடாது இறுகப் பற்றியிருந்தாக அவளது கணவர் சொன்னார். இப்போது அது ஒரு துயரச்சுவை மிகுந்த நகைச்சுவையாகிப்போனது.
ஆனால், இன்றைக்கும் வன்னியின் அம்மாக்களின் கைகளில் இருக்கும் பேசமுடியாத, காதுகேளாத குழந்தைகள் எல்லாம்.. குண்டுகள் அவர்களுக்களித்த துயர் பரிசுகள்தான். இன்னும் செவிப்புலனற்றும்.. பேச்சுத் திறனற்றும் குழந்தைகள் அங்கே பிறக்கும். குண்டுகளின் குரல் ஓங்கியிருக்கும் வரைக்கும் இது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
வன்னியில் இருக்கிற எங்கள் அம்மா சில நாட்கள் முன்பு தங்கையுடன் தொலைபேசியில் பேசினாளாம். அம்மா சொன்ன விபரங்கள் இவை.. அம்மா நேற்றைக்கு மூன்றாம் முறையாக இடம் பெயர்ந்திருந்தாள். இந்த முறை புளியம்போக்கணைக்கு.. அது கிளிநொச்சி நகரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. முதல் இரண்டு தடவை அம்மா இடம்பெயர்ந்த போதும் நாங்கள் அவளுடன் இருந்தோம். இந்த முறை அவள் மட்டும் தனியாய்!
முதலில் நாங்கள் பிறந்து வளர்ந்த கிளிநொச்சியில் இருந்து துப்பாக்கிகளும் விமானங்களும் விரட்ட, அந்த ஊரைவிட்டு கனகராயன்குளம் போனோம். தெரிந்தவர்கள் வீடு ஓன்றில் தங்கி வாழத்தொடங்கிய கொஞ்ச நாட்களில், துப்பாக்கிகளும் விமானங்களும் அங்கேயும் வந்தன. பிறகு, இரண்டாம் முறையாக அங்கேயிருந்தும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அக்கராயன்குளத்திற்கு வந்தோம். ஏழு வருடங்கள் அங்கே அகதி வாழ்க்கை! பிறகு, கிளிநொச்சியை விட்டு ராணுவத்தை புலிகள் விரட்டிய பின்னர், திரும்பவும் நாங்கள் பிறந்து வளர்ந்து விளையாடிய கிளிநொச்சிக்கே வந்தோம்.. தாய் மடிக்குத் திரும்பிய குட்டிகளைப் போல!
எங்கள் மீள்வருகையின்போது, உடைந்து எஞ்சிய சிதிலங்களைத் தவிர அங்கே உருப்படியாய் எதுவும் இருக்க வில்லை. மறுபடியும் சொந்த ஊரைக் கட்டி எழுப்பினோம்.
இதோ, இன்றைக்கு மறுபடியும் அதே ஊரைத் துப்பாக்கிகள் தின்னத்தொடங்கிவிட்டன. போன முறை வெளியேறுவதற்கு இருந்த அவகாசம்கூட இந்த முறை அம்மாவுக்கு இருக்க வில்லை. ‘எதையுமே எடுக்கமுடியவில்லை. கட்டிய சீலை யுடன் வெளியேறிவிட்டேன்’ என்று கூறியிருக்கிறாள் அம்மா. அவள் போன வழிமுழுதும் சனங்கள் பொருட்களை வழிகளிலேயே கைவிட்டுப்போயிருந்தார்களாம். மூழ்கப் போகும் ஒரு கப்பலில் இருந்து பொருட்களை வீசியெறிவதைப் போல, சனங்கள் தங்கள் பொருட்களை எல்லாம் வீசியெறிந்து விட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார் களாம். வயசானவர்கள் தங்களைக் கைவிட்டுவிட்டு குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்ளச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார்களாம். ‘நாங்கள் வாழ்ந்து முடித்துவிட்டோம்.. எங்களை சுமந்து தாமதிக்காதீர்கள்.. குழந்தைகளை தூக்கிக் கொண்டு முதலில் வெளியேறுங்கள்’ என்றார்களாம். இதைச் சொல்லும்போது அம்மா அழுததாக தங்கை சொன்னாள்.
ஈழத் தமிழினத்தின் எதிர்காலம் குழந்தைகள்தான் என்று வயசானவர்கள் நினைக்கிறார்கள். ஈழத் தமிழனுக்கு எதிர்காலமே இருக்கக் கூடாதென்றோ என்னவோ இந்தப் போர் குழந்தைகளைப் பெரும் பசியோடு தின்னுகிறது.
‘மஞ்சுக்குட்டிக்கு கையில்லாமப் போச்சாம்’ என்று அம்மா சொன்னாளாம். ‘ஐந்து வயது சிறுபெண்ணுக்கு கையில்லையா.. ஏன்?’ என்கிற கேள்விகள் அபத்தமாகப் பட்டது எனக்கு. இதுதானே நடக்கிறது.. பிறந்த குழந்தைகளே கைகளை இழக்கும்போதும், உயிரை இழக்கும் போதும்.. இது சாதாரணம்தான். ஆனாலும், மனசுக்குள் எதுவோ நெருடியது.. எதுவோ தொண்டைக்குள் சுழன்றாடியது. நனைந்த கன்னங்களை துடைத்துக்கொள்கிறேன்.
இப்படித்தான் மஞ்சுக்குட்டியும் துடைத்துக் கொள்ளும்.. 3 வயதில் அவளைத் தூக்கி நான் முத்தமிடும்போதெல்லாம் என் கறுப்பு நிறம் தனக்கும் ஒட்டிவிடப்போகிறது என்று சொல்லி தனது கைகளால் நான் முத்தமிட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொள்வாள். பிறகொரு நாள், நான் வெள்ளையாய் மாறுவதற்காக எனக்குச் சில முத்தங்களும் தந்திருக்கிறாள். கடவுள் என்கிற சமாச்சாரங்களில் நம்பிக்கை இல்லையெனச் சொல்லித் திரிகிற ஒரு நாளில்.. தன் அம்மாவோடு கோயிலுக்குப் போய்விட்டு வந்து என் நெற்றியில் அச்சிறு பெண் “அப்பு சாமி” என்று பெரியவர்களின் தொனியில் சொல்லியபடி திருநீறைப் பூசி விடுகையில், ‘கடவுள் இருந்துவிட்டுப் போகட்டும்’ என்று நான் நினைத்தேன். அந்த அழகான கைகளை அவள் இழந்துவிட்டாள். நாசமாய்ப் போன இந்தப் போர் தின்று விட்டது. தன் நான்கு வயதில் எனக்காகவும் சேர்த்து வேண்டிக்கொண்ட அந்தச் சிறு பெண்ணை ஏன் இந்தப் பாழாய்ப்போன தெய்வங்கள் கைவிட்டன?
அம்மாவிடம் இன்னும் பட்டியல்கள் இருந்தன.. குடும்பத்தோடு செத்தவர்கள்.. தனித்தனியாய் செத்தவர்கள்.. கைகால்களை இழந்தவர்கள்... இந்த உலகத்தின் கண்களிற்கு வெறும் எண்ணிக்கைகளாய் மிஞ்சிவிட்ட பட்டியல்கள்! என் நினைவுகளில் போர் தின்று கொண்டிருக்கும் அந்த மனிதர்களின் முகங்கள் மீளெழுந்தன.. செய்வதற்கு ஏதுமற்ற ஏதிலிகளாய் காலத்தால் கைவிடப்பட்டவர்களாய்!
அம்மா ஒரு சங்கீத டீச்சர். அவள் பாடிக் கொண்டிருப்பாள். அம்மா ஒரு அம்மன் பக்தை.. எங்கள் அம்மம்மா ஒரு அம்மன் கோவில் வைத்திருந்தார். முன்பெல்லாம் நாங்கள் செல் வந்து வீழும் நேரங்களில் எல்லாம் அந்த அம்மன் கோயிலடியில் போய் இருப்போம்.. கோயில்கள் தாக்கப்படாது என்கிற நம்பிக்கை யில்! அந்தக் கோயில் குண்டுவீச்சில் உடைந்துவிட்டதாம். இப்போது கோயில்கள், தேவாலயங்கள், பாடசாலை, அரசு அலுவலகம்.. எதுவுமே பாதுகாப்பானவையாக இல்லை. எங்கும் குண்டுகள் வீசப்படுகின்றன.
‘‘உனக்கொன்று தெரியுமா, இப்போது பதுங்கு குழிகள்கூட பாதுகாப்பானவையாக இல்லை. பதுங்கு குழிகளால் மனிதர்கள் தப்பித்து விடுவார்கள் என்பதற்காக நவீனமாக பதுங்கு குழிகளை ஊடுருவி வெடிக்கும் குண்டுகள்தான் இப்போது வீசப்படுகின்றன..’’ என்றாளாம் அம்மா.
அம்மா பாட்டுச் சொல்லிக்கொடுத்துதான் எங்களை வளர்த்தாள். நாங்கள் இடம் பெயர்ந்த பொழுது களிளெல்லாம் அம்மா சுருதிப்பெட்டியைத் தான் முதலில் எடுப்பாள். அதன்பிறகே மற்றதெல்லாம்.. அநேகம் அதிகமாக எதனையும் எடுத்துக்கொள்ளும் அவகாசங்களை குண்டுச் சத்தங்கள் வழங்குவதில்லை. அவசர அவசரமாக வெளியேற வேண்டும்.. ஒரு நாயைப் போல குண்டுகள் விரட்டும் நிலவுமில்லாத இருட்டில் சனங்கள் நகரங்களை விட்டு வெளியேற வேண்டிவரும்.. குண்டுகளின் திசைக்கு எதிராக ஓடிக் கொண்டிருப்பார்கள் மக்கள்.
அப்போதெல்லாம் குண்டுகள் ஒரு திசையில் இருந்து வெடித்துக் கொண்டிருந்தன. மனிதர்கள் வெளியேற திசைகள் இருந்தன. இன்றைக்கு வெளியேறும் திசைகள் குறைந்துவிட்டன. நாலா பக்கமும் போர் நெருக்குகிறது. போவதற்கு ஊர்கள் இல்லை. மரங்களின் கீழ் மாத்திரம்தான் இருக்க முடியும். சமைத்த உணவை அகதிகளுக்கு வழங்குவதற்குக்கூட யாருமில்லை.
முதல் முறையாக நாங்கள் இடம்பெயர்ந்தபோது ஐ.நா. நிறுவனங்கள் வன்னியில் இருந்தன. உடனடியாக மக்களுக்கு உணவையும் தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் உபகரணங்களையும் அவை வழங்கின. நாங்களும் அந்தக் கூடாரங்கள்தான் அமைத்து தங்கினோம். ஆனால், இப்போது வன்னியில் எந்தத் தொண்டு நிறுவனமும் இல்லை. எல்லாவற்றையும் அரசாங்கம் வெளியேற்றி விட்டது.. மக்கள் உணவின்றி, தங்க இடமின்றி காடுகளுக்குள் தஞ்சமடைகிறார்கள்.
ஐந்து ரூபாய்க்கு விற்ற ஒரு தேனீர் இப்போது 25 ரூபாய் விற்கிறது. கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களின் விலைகளும் ஐந்து மடங்காகி விட்டன. தான் ஒரு வேளை மட்டும்தான் சாப்பிடுவதாகச் சொன்னாளாம் அம்மா. பணம் இருக்கிறது. வாங்குவதற்குப் பொருட்கள்தான் இல்லை. தவிர, கடைகளும் இல்லை. அவர்களும்தானே இடம் பெயர்கிறார்கள்!
காலையில் பேக்கரிகளில் ரொட்டிக்கு நீண்ட வரிசையில் சனங்கள் நின்றுகொண்டிருக் கிறார்கள். ஆனாலும், அதில் பாதிப்பேர் வெறுங்கையுடன் தான் திரும்பவேண்டியிருக்கிறது.
எதுவும் நிச்சயமில்லை.. ‘இவ்வளவுதான், இதற்கு மேல் குண்டுகள் வராது; இனிமேல் ஓடவேண்டி வராது’ என்கிற நம்பிக்கைகள் ஏதுமில்லை.. அப்படி ஏதாவது இருந்தாலாவது சின்னதாய் ஒரு குடிசையைப் போட்டுக்கொண்டு இருந்துவிடலாம். ஆனால், இன்னும் ஓடவேண்டியிருக்கும். உயிர் இருக்கும் வரையிலும் அதனைச் சுமந்தாகவேண்டுமே. எதையும் நாங்கள் தீர்மானிக்கமுடியவில்லை எல்லாவற்றையும் துப்பாக்கிகள்தான் தீர்மானிக்கின்றன.
அம்மா அன்றைக்குப்பிறகு தொலைபேசியில் பேசவில்லை. ‘அங்கே இணைப்புகளை குண்டுகள் துண்டித்திருக்கும்..’ என்றாள் தங்கை. நான் எதுவும் சொல்லாமல் மௌனமாயிருந்தேன். ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகு தங்கை சொன்னாள்.. இந்தமுறை தன்னால் சுருதிப்பெட்டியைக்கூட எடுத்துவர முடியவில்லை என்று அம்மா சொன்னதாக! சொல்லி விட்டு அவள் விசும்பும் சத்தம் எனக்கு கேட்டது.
நான் எதுவும் பேசாமல் இணைப்பை துண்டித்தேன்.
- த. அகிலன்