ஓஷோ
தமிழில்:
சித்தார்த்தன்
பெண்ணும் ஆண்தான்!
ஆணும் பெண்ணும்தான்!
என் மகளை வீடு பெருக்கித் துடைக்கச் சொன்னாலோ, துணிகளைத் தோய்க்கச் சொன்னாலோ, ‘அதையெல்லாம் அண்ணனைச் செய்யச் சொல்வதுதானே?’ என்று கோபமாகக் கத்துகிறாள். என் கணவரும், மகனும் சாப்பிட்ட தட்டுகளைக்கூட தேய்க்க மறுக்கிறாள். ‘இதெல்லாம் பெண்கள் செய்யவேண்டிய வேலை’ என்று என் கணவர் சமாதானமாகவும், மிரட்டலாகவும் சொல்லிப் பார்த்துவிட்டார். திருந்தமாட்டேன் என்கிறாள். பெண் என்பவள் ஆணிடம் அடங்கித்தான் போக வேண்டும் என்று அவளுக்குப் புரிய வைப்பது எப்படி?
புரியவைக்க வேண்டியது உங்கள் மகளுக்கு அல்ல. உங்களுக்குத்தான்!
ஒரு நாள், கோவில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த யானை ஒன்றைப் பார்த்தேன். அதன் முன்னங்காலில் கட்டப்பட்டிருந்த கயிறு மிக மெல்லியது. வேறு எந்தச் சங்கிலியாலும் அது கட்டிப் போடப்பட்டிருக்கவில்லை. எந்தக் கூண்டிலும் அடைத்தும் வைக்கப்பட்டிருக்கவில்லை.
யானைக்கு அந்தக் கயிறு ஒரு பொருட்டே இல்லை. எந்த விநாடியும் அறுத்துக்கொண்டு போக முடியும். ஆனாலும், அது கயிற்றை அறுத்துக்கொண்டு போக முயற்சிக்கவில்லை.
அருகில் நின்றிருந்த பாகனிடம், ‘‘இவ்வளவு பிரம்மாண்டமான யானை எவ்வளவு நேரமானாலும் பொறுமையாக இங்கேயே நிற்கிறதே.. ஏன் அது கயிற்றை அறுத்துக் கொண்டு போக முயற்சிப்பதில்லை?’’ என்று கேட்டேன்.
யானைப்பாகன் பெருமிதமாக, ‘‘குட்டியாக இருக்கும்போதே இந்த சைஸ் கயிற்றால் இதன் காலைக் கட்டிப் போட்டு விடுவோம். குட்டியால் அதை அறுத்துக் கொண்டு போக முடியாது. வளர, வளர தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு போக முடியாது என்ற எண்ணம் யானையின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். அதனால்தான், வளர்ந்த பின்னும் தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக் கொண்டு போக அது முயற்சி செய்வது இல்லை!’’ என்றான்.
கயிற்றை அறுத்துக் கொண்டு போகும் வலிமையைப் பெற்றிருந்தாலும், அதனைத் தன்னால் அறுக்க முடியாது என்று சிறு வயதிலிருந்தே நம்பிக் கொண்டிருப்பதை யானையால், வளர்ந்த பின்பும் மாற்றிக் கொள்ள இயலவில்லை. பெண்களும் யானைகள் போல்தான்! சிறு வயதிலிருந்தே ஆணைவிடப் பெண் தாழ்ந்தவள் என்று மாற்றி மாற்றிப் போதிக்கப்பட்டதால், அவளும் கயிற்றினை அறுத்துக்கொண்டு போகாத யானையாக மாறிவிட்டாள்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே இருக்கும் வேற்றுமைகள் மிகச் சில! அவையும் உடல் ரீதியானவை மட்டுமே!
மற்றபடி அவர்களிடையே இருப்பதாக நினைக்கும் முரண்பாடுகள் அனைத்தும் கற்பனையானவையே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமுதாயக் கட்டுப்பாடுகளினால் உருவாக்கப்பட்டு, ஆண்களின் சுயநலம் காரணமாகத் தொடரப்படுபவையே.
உயிர்கள் வாழ்ந்து, பெருகி, தழைப்பது என்பது வாழ்க்கையின் அடிப்படையான நியதி. ஓர் உயிரை உருவாக்கி, உலகை மேம்படுத்தும் பெரும் பணிக்கு இயற்கை தேர்ந்தெடுத்திருக்கும் உயர் சக்தியே பெண்தான்.
மனித இனம் மட்டுமல்ல, உலகில் இயங்கும் ஜீவராசிகள் அனைத்தும், அவற்றின் பெண் பாலரின் மூலம்தான் பல்கிப் பெருகி வாழ்கின்றன. உயிர் உற்பத்தியில் ஆணின் பங்கு மிகக் குறைவு.
அடுத்தது, அன்பு எனும் பெரும் பண்பு!
பெண்மையும், அன்பும் இணை பிரியாமல் பின்னிப் பிணைந்தவை.
பெற்றெடுப்பதால் மட்டுமே ஓர் உயிர் வாழ்ந்துவிடுவதில்லை. அந்தச் சின்னஞ்சிறு உயிரின் பசி, தாகம் போன்ற அடிப்படைத் தேவைகளையும், பாசம், பரிவு என்னும் மனரீதியான தேவைகளையும் நிறைவேற்றும் பெரும் பொறுப்பு பெண்ணிடம்தான் அளிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், இவை அன்பெனும் உணர்வால் மட்டுமே நிறைவேற்றப் படக் கூடியவை; அந்த அன்பை எந்தத் தயக்கமுமின்றிப் பொழியும் திறன் பெண்ணிடம் மட்டும்தான் உள்ளது!
அன்பு காட்டுவதும், அதைச் சேவையாக மலரச் செய்வதும் பெண்களின் இயற்கையான குணங்கள் என்ற ஒரே காரணத்தினால் தான் நோயாளிகளைப் பேணும் நர்ஸ், இளம் குழந்தைகளை வளர்க்கும் தாதியர், குழந்தைகளுக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியர், சமுதாய முன்னேற்றத்துக்காக உழைக்கும் சேவகிகள் ஆகிய சேவைப் பணிகள் அனைத்திலும் பெண்களே பெரும் பங்கு வகிக்கிறார்கள்.
வாழ்க்கையை சொர்க்கமாக்கும் உணர்வுகளான பாசம், பரிவு, பொறுமை.. இவை அனைத்தும்கூட பெண்மைக்கே உரித்தான பெரும் சொத்துக்களாகும். தான் இருக்கும் இடத்தையும், உடன் வாழும் மனிதர் களையும் வளமாக வாழச்செய்யும் பெரும் சக்தி அவள்!
ஆனால், இவை அனைத்துக்கும் பிரதிபலனாக அவளுக்குக் கிடைப் பது என்ன? சமூகத்தில் உயரிய ஒரு நிலையா? இல்லை, அவளால் பயன்பெற்ற ஆண்களின் மனங்களில் பெருமிதமான ஓர் இடமா?
இரண்டும் இல்லை என்பதுதான் சோகமானதொரு உண்மை!
பெண் பல விதங்களிலும் சிறந்தவள் என்று உணர்ந்து அச்சம் கொண்ட ஆண், அவளைவிட தான்தான் உயர்ந்தவன் என்று நிரூபித்துக்கொள்ளும் மோசமானதொரு முயற்சியில் இறங்கினான். அவளுடைய ஞானம், திறமை, அறிவு அனைத்தையும் கட்டுப்படுத்தி, அவளுடைய சுதந்திரத்தை அழித்து, ‘பெண் என்பவள் ஆணுக்கு அடிமை’ என்ற நிலைக்குத் தள்ளினான்.
இதற்குத் துணையாக ‘உடல் வலிமையில் பெண், ஆணைவிடக் குறைந்தவள்’ என்ற இயற்கை நியதியையும் தந்திரமாக, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.
அப்படியெனில், அதிக உடல் வலிமை கொண்ட விலங்குகள், மனித இனத்தைவிட உயர்ந்தவை என்றா கருத முடியும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்க அவன் தயாராக இல்லை.
வெளியே போயிருந்த மனைவி வீட்டு வாசலில் நின்று, கதவைத் திறக்குமாறு கத்தினாள். அதே நேரம் வீட்டின் பின்புறக் கதவுக்கு வெளியே வளர்ப்பு நாய், தன்னை உள்ளே விடும்படி குலைத்தது.
கணவன் வீட்டின் பின் கதவைத் திறந்து நாயை முதலில் உள்ளே வர அனுமதித்தான். ஏன் தெரியுமா? வீட்டுக்குள் வந்த பின் நாய் குரைப்பதை நிறுத்திவிடுமாம்!
இந்த ஜோக்கில் வருவது போல, பெண்களைவிட விலங்குகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்ட காலமும் ஒன்று இருந்தது.
சீனாவில் அந்த நாட்களில் பெண்ணானவள் உயிரும், உணர்வுகளும் அற்ற ஒரு ஜடப் பொருளாகத் தான் கருதப்பட்டாள். ஆணுடைய உடமையான அவளை, அவன் கொலை செய்வது உட்பட எது வேண்டுமானாலும் செய்யலாம்; அதனால் அவன் குற்றவாளியாகக் கருதப்பட மாட்டான் என்றது அந்த நாட்டுச் சட்டம்.
நம் நாட்டிலோ, கணவன் இறந்தால் அவனுடன் மனைவியையும் சேர்த்து எரித்துக் கொல்லும், சதி எனப்படும் பயங்கரமான பழக்கம் பல்லாண்டு காலம் நிலவி வந்தது. மனைவிக்கான கடமை, கணவனுக்கு இன்பம் அளிப்பது மட்டுமே என்பதால், அவன் இறப்புக்குப் பின் வாழும் உரிமையையும் மனைவி இழந்துவிடுகிறாள் என்றது நம் சமுதாயம்.
தன்னுடைய அதிகார வெறியினாலும், அகம்பாவத்தாலும், ஆண் & பெண் என்ற பிரிக்க முடியாத இரு கூறுகளில் ஒன்றான பெண்ணை அடக்கி ஆண்டு, அவள் முழுத்திறனுடன் இயங்க இயலாமல் ஆண் செய்ததால், சமுதாயத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு கொஞ்ச நஞ்சமன்று.
உபநிஷத்தில், ஞானி ஒருவர் திருமணம் புரிந்து கொண்ட புது மண மகளை ‘நீ பத்து அழகிய குழந்தைகளின் தாயாகப் பெறுவாயாக. பிறகு கண வனையே உன்னுடைய பதினோராவது குழந்தையாக நேசிப்பாயாக. கணவனுக்கே தாயான பின்புதான், மனைவி என்ற ஸ்தானத்தில் நீ முழுமை பெறுகி றாய் என்பதை அறிந்து கொள்வாயாக!’ என்று ஆசீர்வதிக்கிறார்.
பெண் அன்பின் வடிவமானவள். அதன் வெளிப்பாடான தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிடத்திலும் பொங்கித் ததும்பும் இயற்கையான உணர்வு. இது ஒன்றே நம்மை வாழ்வித்து, வளப்படுத்தும் பேருணர்வாகும் என்ற அரிய உண்மைதான் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆணைவிட பெண் சிறந்தவள் என்று சொல்வதோ, இல்லை.. பெண்ணை விட ஆண் உயர்ந்தவன் என்று கொள்வதோ அறியாமையால் எழுந்த கருத்து.
இருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். உருவத்திலோ, செயலிலோ சிறிது வேறுபட்டிருந்தாலும், எதிரிகளாக இல்லாமல், ஒருவருக்கொருவர் துணையாக இருந்து செயலாற்றக் கூடியவர்கள். ஒருவர் குறையை மற்றவர் இட்டுப் பூர்த்தி செய்து ஓர் அழகிய முழுமையை உருவாக்கக் கூடியவர்கள்.
இதை முதலில் நீங்கள் உணர்ந்து திருந்துங்கள். உங்கள் கணவருக்கு உணர்த்துங்கள். உங்கள் மகளுக்கும் உணர்த்தி அவளது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய வழி செய்யுங்கள்.
No comments:
Post a Comment