Mar 31, 2009

உயிர்த்தெழுந்த சாந்தி


மல்லிகை மகள் ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை..

து 2006&ம் ஆண்டு, டிசம்பர் 9&ம் தேதி..

தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடத்தில் வந்து, வெள்ளிப் பதக்கம் பெற்றார் - தமிழகத்தின் தடகள வீராங்கனை சாந்தி!

கடுமையான பயிற்சியாலும், திறமையாலும் உலகளாவிய உயரத்தில் ஏறிய அந்தக் கிராமத்து பெண்ணை, ஏறிய அதே நாளில் அவ்வளவு உயரத்தில் இருந்து தலைகுப்புறத் தள்ளிவிடப்பட்டதுதான் கொடுமை!
‘பாலியல் சோதனையில் தோல்வி’ என்ற சிக்கல் எழுந்து, உலகமே பார்த்துக்கொண்டிருந்த அரங்கில்.. லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சாந்தியிடம் கொடுக்கப்பட்ட பதக்கம், பறிக்கப்பட்டது.

ஆனால், எந்தப் பெண்ணிடமிருந்து ‘பெண் தன்மை இல்லை’ என்ற காரணத்துக்காக பதக்கத்தைப் பறித்தார்களோ.. அதே பெண், இன்று பத்து ஏழை மாணவர்களை தன் பொறுப்பில் வைத்து ஒரு தாய்போல பராமரிப்பதோடு, 60 மாணவ, மாணவியருக்கு தடகளப் பயிற்சியும் அளிக்கிறார். ஓட்டப் பந்தயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர், 24 மணி நேரமும் பயிற்சி, பயிற்சி என்று ‘ஓடிக்’ கொண்டிருக்கிறார்!

‘‘எப்படி இருக்கீங்க சாந்தி?’’

‘‘நல்லா இருக்கேன்.. நிம்மதியா, சந்தோஷமா இருக்கேன். கடந்த ஒண்ணேகால் வருஷமா, இங்கே புதுக்கோட்டையில ‘அத்லெட்டிக் கோச்’ஆ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால நியமிக்கப்பட்டிருக்கேன். என்கிட்ட இப்ப அறுபது பசங்க பயிற்சி எடுத்துட்டிருக் காங்க.. ரன்னிங், ஜம்ப்பிங், த்ரோயிங்.. எல்லாத்திலேயும் பயிற்சி கொடுத்திட்டிருக்கேன்..’’

‘‘ஓட்டம்.. ஓட்டம்னு ஓட்டத்தையே உங்க மூச்சா நினைச்சுட்டிருந்த நீங்க, இந்த மாற்றத்தை எப்படி ஏத்துக்கிட்டீங்க?’’

‘‘என் மூச்சைத்தான் நிறுத்திட்டாங்களே, மேடம்!’’ என்று ‘சட்’டென்று கூற.. அந்தக் குரலின் வலியும் வேதனையும் நம்மை உலுக்கியது.

‘‘ரொம்ப கஷ்டமா இருந்தது. இப்படி, அப்படின்னு விளக்கிச் சொல்ல முடியாத சோகம் அது! என்னால ஏத்துக்கவே முடியாத ஒரு சூழ்நிலை! கிட்டத்தட்ட அது என் மரணம்! நான் எதைக் கனவு கண்டிருந்தேனோ, அந்தக் கனவு என் கைவசமாகி.. மறுநிமிஷமே கைவிட்டுப் போனது யாருக்கும் நடக்கக் கூடாத துரதிர்ஷ்டம்!

தொடர்ந்த முதுகுவலி காரணமா, ஏஷியன் கேம்ஸுக்குப் பிறகு நானே ஓடறதை நிறுத்தலாம்னுதான் திட்டமிட்டிருந்தேன். ஆனா, நான் நேசிச்ச ஒரு விஷயத்தை என்கிட்டருந்து வலுக்கட்டாயமா பிடுங்கிட்டாங்க.. என் கண்ணீரும் காயங்களும் கொஞ்ச நஞ்சம் இல்லை.. எல்லாரும் என்னென்னவோ பேசினாங்க.. ஏதேதோ எழுதினாங்க.. தோஹாவிலிருந்து வந்ததுக்கு அப்புறமும் அந்த சம்பவங்களும் அவமானமும் என்னை விரட்டினதாலதான் தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன்.. ஆனா, அதிலருந்தும் பிழைச்சப்பத்தான், ‘கடவுள் எனக்காக வேற ஏதோ வேலை வச்சிருக்கார்!’னு தோணுச்சு.

பழசையெல்லாம் மறக்க முயற்சி செஞ்சு, கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வர்றேன்.. பரவாயில்லை.. தெரிஞ்சோ தெரியாமலோ இந்த உலகமும் சமூகமும் எனக்கு நல்லதுதான் செய்திருக்கு! இல்லேன்னா, நான் ‘கோச்’ ஆகியிருப்பேனா? வசதியில்லாத புள்ளைங்களுக்கு இப்படி பிராக்டீஸ் கொடுக்கற வாய்ப்புத்தான் கிடைச்சிருக்குமா? இப்ப என் ஆசையெல்லாம் என் புள்ளைங்க ‘அத்லெட்டிக்ஸ்’ல நல்லா வரணும்.. உலக அளவில சாதிக்கணும், மெடல் வாங்கணும்கிறதுதான்!’’ என்றவரின் குரலில், ஆரம்பத்தில் இருந்த தொய்வும் சோர்வும் போய், உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்கியது.

‘‘உங்களுக்குத் தெரியுமா.. போன மாசம் நடந்த சென்னை மாரத்தான்ல அஞ்சு கிலோமீட்டர் பிரிவுல ஃபர்ஸ்ட் வந்தது ‘என்’ பையன்தான்.. பேரு வேணுகோபால். பத்தாயிரம் ரூபாய் கேஷ் பிரைஸ் வாங்கினான். அதே பிரிவுல தேர்ட் வந்ததும் முத்துக்குமார்&கிற ‘என்’ பையன்தான் . அது மட்டுமில்ல.. போபால்ல நடந்த தேசிய அளவிலான ஓட்டப் பந்தயத் தில் 300 மீட்டர் பிரிவுல, ‘என்’ பொண்ணு ராணி செகண்ட் வந்திருக்கா!’’ & சொல்லச் சொல்ல அப்படி ஒரு பெருமை அவர் பேச்சில்!

முதலிடம் பெற்ற மகனையும் மகளையும் பற்றி ஒரு தாய் எப்படிப் பூரிப்பாரோ, அதற்கு எள்ளளவும் குறைவில்லை அவரிடத்தில்! இந்தப் பிள்ளைகள் அனை வருக்குமே இப்போது சாந்தி ஒரு வளர்ப்புத் தாய்!

சாந்தியின் சொந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள கத்தக்குறிச்சி. பெற்றோர் சௌந்திரராஜன் & மணிமேகலை, செங்கல் சூளையில் கூலித் தொழிலாளிகள். மகளின் ஏற்றம், இறக்கம் & இதெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமே புரிபடாத அளவுக்கு வெகுளிகளாக, வெளியுலகம் தெரியாத அப்பாவிகளாக உள்ளனர்.

‘‘ஆனா, இப்ப அம்மாவும் அப்பாவும் அந்த அதிர்ச்சியிலேர்ந்து மீண்டு வந்துட்டாங்க.. ரொம்ப நார்மலா இருக்காங்க. ஏன்னா, என் லைஃப் இப்ப நார்மலா ஆயிடுச்சு இல்லையா? விளையாட்டில் மெடல்ங்கிறதுகூட அடுத்ததுதான்.. என் முதல் லட்சியமே என் தங்கை, தம்பிகளுக்கு மூணு வேளை நல்ல சாப்பாடு கொடுத்து, நல்லாப் படிக்க வைக்கணும்கிறதாதான் இருந்துச்சு! அதை ஓரளவுக்கு நிறைவேத்திட்டேன். பெரிய தங்கச்சி பாலிடெக்னிக் படிக்குது. அடுத்த தங்கச்சி 12&வதும் தம்பி 10&வதும் படிக்கிறாங்க.. இதுல ஒரு தம்பிக்கும் தங்கைக்கும் விளையாட்டுல நல்ல ஆர்வம் இருக்கு.. அவங்களையும் ‘அத்லெட்’&ஆ உருவாக்கணும்! பதக்கக் கனவு கனவாகவே இருந்தாலும்கூட, என்னோட இந்த லட்சியத்தை நனவாக்கற முயற்சியில நிச்சயமா வெற்றியடைஞ்சிடுவேன்னு தோணுது’’ என்கிறார், உறுதியாக.

தற்சமயம் புதுக்கோட்டையில் ஒரு வாடகை வீட்டில் இருக்கும் சாந்தி, தன்னிடம் பயிற்சி பெறும் ஏழை மாணவர்களுக்காக செய்திருக்கும் காரியம் பிரமிப்பூட்டுகிறது. மிகவும் வசதியில்லாத, ஆனால் விளையாட்டில் திறமை மிக்க சில மாணவர்களை தன் வீட்டிலேயே தங்க வைத்திருப்பதோடு, அவர்களுக்கு மூன்று வேளை உணவும் அளித்துப் பராமரிக்கிறார்!

‘‘உங்க வருமானத்துல இது சாத்தியமா சாந்தி?’’ என்றால், ‘‘நிச்சயமா இல்ல..’’ என்று சிரிக்கிறார்.

‘‘எனக்கு நிரந்தர வேலைகூட கிடையாது.. கான்ட்ராக்ட் தான்! சம்பளமும் கம்மிதான்! ஆனா.. அதையெல்லாம் நான் யோசிக்கல. இவங்கள்லாம் சுத்துப்பட்டுல இருக்கிற கிராமத்துப் பசங்க.. அப்பா, அம்மா வயல்ல கூலி வேலை செய்றவங்க. நல்ல சாப்பாட்டுக்கும் பயிற்சிக்கும் எங்க போவாங்க? அதான் இந்த இலவச ஹாஸ்டல், சாப்பாடு எல்லாம். நான் இந்த மாதிரி ஆரம்பக் கட்டத்துல இருக்கறப்போ எனக்கு உதவி செய்ய யாருமே இல்லை.. அதனால, எனக்குக் கிடைக்கற வருமானத்துல என்னால முடிஞ்ச வரைக்கும் செய்யலாம்னு இருக்கேன்.. முடியாதப்போ பார்த்துக்கலாம்!’’

‘‘வீட்டில் இத்தனை பேருக்கும் சமையல் யாரு?’’

‘‘வேற யாரு? நான்தான்.. காலைல ஆறு மணிக்கெல்லாம் கிரவுண்டுக்குப் போனா பிராக்டீஸ் முடிஞ்சு வர்றப்ப ஒன்பது மணி ஆயிடும்.. அப்புறம் இந்தப் பசங்களுக்கான சமையலை செஞ்சு முடிச்சிடுவேன்.. எல்லாரும் குளிச்சு, சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போவாங்க.. அப்புறம், ராத்திரி சாப்பாட்டை செய்து வச்சுட்டு ஈவனிங் பிராக்டீஸ்க்கு போவேன்.. பசங்க எல்லாம் நைட் வந்து சாப்பிட்டுப் படுப்பாங்க.. இதுவும் எனக்கு ஒரு குடும்பம்தான்!’’ என்னும் சாந்தி, ‘‘இந்தப் பசங்களுக்காக ஏதாவது பண்ணனும் மேடம்’’ என்கிறார், அந்த ‘ஏதாவது’க்கு அழுத்தம் கொடுத்து.

‘‘இவங்களைப் பெரிசா டெவலப் பண்ணனும். இன்னும் நாலஞ்சு வருஷத்துல என் பசங்கள்ல யாரையாவது ஒருத்தரை பெரிசா உருவாக்கி, ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி, நம்ம நாட்டுக்காக பதக்கம் வாங்கற வரைக்கும் ஓயமாட்டேன்.. இப்போதைக்கு எனக்குள்ள எரிஞ்சிட்டிருக்கற லட்சியம் அதுதான்!’’ என்றவரிடம், மெதுவாகக் கேட்டோம்.

‘‘உங்க சொந்த வாழ்க்கை பற்றி ஏதாவது திட்டம் வச்சிருக்கீங்களா? கல்யாணம் பற்றி...?’’ - நாம் முடிக்கும் முன்னரே பளிச்சென வருகிறது பதில்.

‘‘அதைப் பத்தி நினைக்கக் கூட இப்ப நேரமில்ல.. இப்ப என் வாழ்க்கை என் புள்ளைங்களைச் சுத்தித்தான்.. என் குறிக்கோள் எல்லாம் அவங்களை நல்லபடியா உருவாக்கணும்கிறதுதான்.. அதனால வேற எந்தச் சிந்தனைக்கும் திட்டங்களுக்கும் இடமில்லை.. ’’ - 27 வயதில் பெரிய அனுபவசாலிபோலப் பேசும் சாந்திக்கு, ஒரு வருத்தம்.. ஒரு ஆதங்கம்!

‘‘இவங்க எல்லாருமே வறுமையான குடும்பம் கிறதால, கிரவுண்டில் பிராக்டீஸ் பண்ணும்போது பேப்பர் போடுறவங்க வந்து, ‘வீடு வீடாப் போய் பேப்பர் போடு.. மாசம் 500 ரூபா தர்றேன்’னு கூப்பிட்டாப் போயிடறாங்க.. ரெண்டு மூணு பசங்க போயிட்டாங்க. என்னால தடுக்க முடியல.. ஏன்னா, என்னால அந்த 500 ரூபாயைக் கொடுக்க முடியாதே! அதேபோல, இந்தப் பிள்ளைங்களை ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல் போட்டிகளுக்கெல்லாம் நானே கஷ்டப்பட்டு அனுப்பிடறேன்.. ஆனா, இவங்க திறமை அதோட நின்னுடக் கூடாது.. உலகளவில் இவங்களை வெளிய கொண்டுவரணும்னா, அதுக்கு நிறையப் பணம் செலவழிக்கணும். எனக்கு அனுபவமும், பயிற்சி கொடுத்துக் கொண்டுவரக்கூடிய நம்பிக்கையும் இருக்கு.. ஆனா பண வசதி இல்லையேனு ரொம்ப வருத்தமா இருக்கு..! இருந்தாலும், எப்பாடுபட்டாவது நான் இழந்த பெருமையை, என் பிள்ளைங்க மூலமா இந்த தேசத்துக்குப் பெற்றுத் தரணும்கிறதுல உறுதியா இருக்கேன்!’’

இவருடைய உண்மையான அக்கறையும், தீயாய்க் கனன்று கொண்டிருக்கும் வெறியும், நிச்சயம் ஒரு நல்ல விளையாட்டு வீரரை இந்த தேசத்துக்கு உருவாக்கித் தரும். அப்போதுதான் இந்தத் ‘தாயின்’ மனதுக்கு ஒரு ‘சாந்தி’ கிடைக்கும்!

- பிரேமா நாராயணன்

8 comments:

Dr.Rudhran said...

send this to all. good post

MALLIGAI MAGAL said...

Thanks Dr.

Joe said...

//
‘‘இவங்களைப் பெரிசா டெவலப் பண்ணனும். இன்னும் நாலஞ்சு வருஷத்துல என் பசங்கள்ல யாரையாவது ஒருத்தரை பெரிசா உருவாக்கி, ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பி, நம்ம நாட்டுக்காக பதக்கம் வாங்கற வரைக்கும் ஓயமாட்டேன்.. இப்போதைக்கு எனக்குள்ள எரிஞ்சிட்டிருக்கற லட்சியம் அதுதான்!’’
//
சாந்தியின் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.

sethuraman.sathappan said...

Prema Narayanan,
The article is too good and I think through your article Shanthi may get many sponsors. I Wish her all the best.
Regards
Sethuraman Sathappan
Mumbai

டி.அருள் எழிலன் said...

நல்ல கட்டுரை..இம்மாதிரி கட்டுரைக்ள் எழுத நான் விரும்புவேன். தேங்க்யூ பிரேமா மேடம்.

பூங்குழலி said...

அன்பு பிரேமா..

நம்பிக்கையூட்டும் நேர்காணல். இந்த சமூகம் சாந்தியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. மலைக்க வைத்து விட்டார் சாந்தி.

அன்புடன்
பூங்குழலி

Anonymous said...

superb.me too likes to do this type of story

-barathi

manovarsha said...

Simply superb