Dec 15, 2009


கோவை சரளா.. தெரியாத நிஜம்!

எல்லோருக்கும் தெரிந்த வி.ஐ.பி&க்களின் வெளியில் தெரியாத நிஜ இயல்புகளை விசாரிக்கும் தொடர் பகுதி இது! இந்த இதழில், உங்களை நெகிழ வைப்பது கோவை சரளா!

திரையில் எல்லாரையும் சிரிக்க வைக்கிற என் தோழி, நிஜத்தில் ஒரு மெழுகுவர்த்தி மாதிரி! தன் உடன் பிறந்தவங்களுக்காக சின்ன வயசிலருந்து உழைச்சு, அவங்க பசங்களைத் தன் பசங்க மாதிரி வளர்த்து, ஆளாக்கி, படிக்க வச்சு, கல்யாணமும் பண்ணிப் பார்க்கும் பெரிய மனசுக் காரி!’’
- ‘கோவை சரளா’ பற்றி இப்படிச் சொல்லி உருகுகிறார், அவரது கால் நூற்றாண்டு கால தோழியான ராணி.

கொங்கு தமிழில் ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் கோவை சரளாவின் இன்னொரு பக்கம் நெகிழ்ச்சியானது. இதோ, அவரோடு நெருங்கிப் பழகும் மூவர், சரளா பற்றி வெளியுலகம் அறியாத நிஜங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள்.

லதா மோகன்தாஸ் (சரளாவின் நெருங்கிய தோழி மற்றும் சம்பந்தி), திருநெல்வேலி:
‘‘எனக்கு சரளாவை எட்டு வருஷமாதான் தெரியும்.. ஆனா, எண்பது வருஷப் பழக்கம் மாதிரி அப்படி ஒரு அன்பும் அன்னியோன்யமும் வந்துடுச்சு எங்களுக்குள்ள.. கோயம்புத்தூர் கணபதில, சரளாவோட அக்கா வீடும் எங்க அண்ணா வீடும் நெய்பர்ஸ்.. நான் அண்ணா வீட்டுக்குப் போறப்ப, சரளாவும் அவங்க அக்கா வீட்டுக்கு வந்திருந்தாங்கன்னா, பார்த்துப் பேசுவேன். அப்படி ஆரம்பிச்ச பழக்கம்தான், சம்பந்தம் பண்ற அளவுக்கு வளந்துடுச்சு. எங்க பொண்ணை, சரளாவோட அண்ணா பையனுக்கு கல்யாணம் செய்து கொடுத்திருக்கோம்.

ரெண்டு மூணு வருஷமா என்னோட தீபாவளியே சென்னையில சரளா வீட்டில்தான்! வருஷாவருஷம் எனக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்துடுவாங்க.. அதுமட்டுமல்ல, தன் வீட்டு செக்யூரிடிலருந்து, பக்கத்து அபார்ட்மென்ட் வாட்ச்மேன், எதிர்த்தாப்ல இருக்கற மெக்கானிக் ஷெட் பசங்கனு எல்லாருக்கும் துணி எடுத்துத் தருவாங்க.. தீபாவளி அன்னிக்கு அவங்க அத்தனை பேருக்குமே சரளா வீட்டுலதான் லன்ச். அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 50,000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி, அந்தத் தெருவுல எல்லாருக்கும் கொடுத்து வெடிக்க வெச்சு, அவங்க சந்தோஷப்படறதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவாங்க.. அப்படியொரு மனசு!

ஒரு சமயம், நாங்க எல்லாரும் பேசிக்கிட்டிருக்கறப்ப, சரளாவோட ஸ்கூல் மேட் ஒருத்தங்க கணவரை இழந்து குழந்தைங்களோட கஷ்டப்படறதைப் பத்தி பேச்சோட பேச்சா சொல்லிட்டிருந்தாங்க அவங்க அக்கா. உடனே, அந்த ஃப்ரெண்ட் இப்ப எங்க இருக்காங்கன்னு தேடிப் பிடிச்சு, அவங்க குழந்தைங்களோட படிப்புச் செலவுக்கு பண உதவி செய்தாங்க. ஸ்கூல் டேஸ்&க்கு அப்புறம் ரெண்டு பேருக்கும் எந்த ‘டச்’&ம் இல்ல.. ஆனாலும், ஓடிப் போய் உதவின மனிதநேயம்.. அதுதான் சரளா!

அதேமாதிரி, காசிக்குப் போகணும்னு ஆசைப்பட்டு, வசதி இல்லாததால போக முடியாம இருந்த வயசான ஒரு தம்பதிக்கு, காசிக்கு போய்ட்டு வர்றதுக்கு அரேன்ஜ் பண்ணினாங்க.. டூர் முடிச்சிட்டு வந்தவங்க, ‘எங்க புள்ளைங்க நிறைவேத்தாத ஆசையை, நீ நிறைவேத்திட்டம்மா.. இந்தப் புண்ணியம் முழுதும் உனக்குத்தான்!’னு சொல்லி, கண்கலங்கினதை மறக்கவே முடியாது!

கஷ்டப்படறவங்களுக்கு உதவுறதுல, எம்.ஜி.ஆர் தான் சரளாவோட ரோல்மாடல்.மருத்துவம், கல்வினு பல பேருக்கு உதவி செய்திருக்காங்க.

சரளாவுக்கு சமையல்னா ரொம்ப இஷ்டம்.. சென்னையில தன் வீட்ல அவங்க சமைக்கிறதுக்கு ஆள் வச்சுக்கலன்னா பார்த்துக்குங்க. ஹைதராபாத்துக்கு அடிக்கடி ஷூட்டிங் போறதால ஆந்திரா அயிட்டம்லாம் நிறைய கத்துக்கிட்டு வந்து செய்வாங்க.. ஆந்திரா சமையல்லருந்து அந்தக் காலத்துல செய்ற மருந்துக் குழம்பு வரை, நிறைய அயிட்டம் நான் சரளாகிட்ட கத்துக்கிட்டிருக்கேன்.

சரளாவுக்கு நாலு அக்கா, ஒரு அண்ணா.. எல்லோரும் ரொம்பப் பாசமா, ஒற்றுமையா இருப்பாங்க.. சரளாவை தவிர மத்த எல்லோருமே கோவையிலதான் இருக்காங்க.. அதனால, நேரம் கிடைக்கறப்ப எல்லாம் சரளா கோவைக்கு வந்துடுவாங்க. அவங்க அக்காக் களும் பசங்களும் ‘சரளா’ன்னா உயிரையே விடுவாங்க.

சரளாவோட அக்கா ஒருத்தங்க சின்ன வயசிலேயே இறந்துட் டாங்க.. அவங்க பையனை சரளாவேதான் தன் கூட வச்சு வளர்த்துட்டு வர்றாங்க.. எங்க மாப்பிள்ளையும் (அவங்க அண்ணா பையன் & யு.எஸ்&ல மைக்ரோஸாஃப்ட்ல வேலை பார்க்கிறார்) சரளாகிட்ட வளர்ந்தவர்தான். பசங்க எல்லாம் அண்ணா யுனிவர்ஸிடில படிச்சுப் பெரிய வேலையில இருக்காங்க.. ஒரு பாக்கு கூட போட மாட்டாங்க.. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாம அப்படி ஒரு கண்டிப்பான வளர்ப்பு அவங்களோடது..

குடும்பத்தில் இருக்கறவங்களுக்கு டிரஸ், நகைனு வாங்கிக் கொடுத்து போட்டுக்கச் சொல்லி அழகு பார்ப்பாங்களே தவிர, தான் ஆடம்பரமா எதுவுமே போட்டுக்க விரும்ப மாட்டாங்க.. கழுத்தில ருத்ராட்சம் கோர்த்த ஒரு மணிமாலைதான்! கிட்டத்தட்ட ஒரு துறவி போல வாழ்க்கை நடத்தும் சரளாவோட நட்பு, எனக்குக் கடவுள் கொடுத்த பரிசு!’’

மீனா சம்பத்குமார், கோவை (சரளாவின் அக்கா மகள்):
‘‘கோவை சரளாவின் நாலாவது அக்கா பொண்ணு நான்! சரளா சித்தியை நாங்க ‘ஜெம்லி’னுதான் கூப்பிடுவோம். அந்தப் பேர் எப்படி வந்ததுனு எல்லாம் தெரியாது. ஆனா, எங்க வீட்ல பெரியவங்கள்லருந்து சின்னவங்க வரைக்கும் அவங்க, ‘ஜெம்லி’தான்..

எங்க ஃபேமிலியோட ‘பைண்டிங் ஃபேக்டர்’ அவங்கதான்.. குடும்பத்தோட அவ்வளவு பாசப்பிணைப்பா இருப்பாங்க.. ஜெம்லி சென்னையில இருந்தாலும், கோவையில இருக்கற எல்லா குடும்பத்திலருந்தும் எல்லா ‘அப்டேட்ஸ்’ம் பக்காவா அவங்களுக்குப் போயிடும்.. ஷூட்டிங், ஃபங்ஷன், அது, இதுன்னு பிஸியா இருந்தாலும், கம்யூனிகேஷனை அவ்வளவு அழகா மெயின்டெயின் பண்ணுவாங்க.

ஆண், பெண் வித்தியாசம் இல்லாம எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்யணும்கிறது ஜெம்லியோட உத்தரவு. அதனால, சமையல்லருந்து டிரைவிங் வரை எல்லாருமே எல்லாம் கத்துக்கிட்டிருக்கோம்.. எங்க வீட்டு வேலைக்கு ஆள் இருந்தாலும், டாய்லட் சுத்தம் செய்றது உள்பட எந்த வேலையாக இருந்தாலும், அவசியம்னா நாங்களும் செய்வோம்.

ஜெம்லி படிச்சதெல்லாம் கோவையில தான்.. ஸ்கூல்ல படிக்கறப்பயே, நல்ல பேச்சுத் திறமை இருந்தது ஜெம்லிக்கு! ஒருமுறை, எம்.ஜி.ஆர். கோவை வந்திருக்கறப்போ, ஜெம்லியை அவருக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்காங்க. அவர், ‘உனக்கு நிறைய திறமை இருக்கு.. நீ நல்லாப் படிக்கணும்’னு சொல்லி, ஸ்காலர்ஷிப் கொடுத்திருக்கார். அந்த ஸ்ஸாலர்ஷிப் உதவியில படிச்சதாலதான், அவங்களுக்கு ‘நாமும் பிறருக்கு படிக்கிறதுக்கு உதவி செய்யணும்’கிற எண்ணம் சின்ன வயசிலேயே ஆழமாப் பதிஞ்சிருச்சு!

ஜெம்லிக்கு சிம்பிளா டிரெஸ் பண்றது தான் பிடிக்கும். நிறங்கள்ல வெள்ளையும், மாம்பழ மஞ்சளும் ரொம்பப் பிடிக்கும். அவங்களோட இஷ்ட தெய்வம்னா அது குருவாயூரப்பனும், பகவதி அம்மனும். சொந்த ஊர் திருச்சூர்.. வருஷம் ஒரு தடவை எல்லோரும் குலதெய்வம் கோயிலுக்கு கண்டிப்பா போயிடுவோம்.

ஜெம்லி, யாரையும் புண்படுத்தற மாதிரி பேசவே மாட்டாங்க.. கோபத்தை கூட அவங்க காண்பிக்கிற விதம் வித்தியாசமா இருக்கும். ‘ஒரு விசேஷம் நடக்குது.. அதுல ஜெம்லிக்கு ஏதோ ஒரு கோபம்’னா, நாங்க எல்லாரும் கிராண்டா ஸாரி கட்டிட்டிருக்கும் போது, அவங்க மட்டும் ரொம்ப சிம்பிளா ஒரு டிரெஸ் போட்டுக்கிட்டு வருவாங்க.. அதுலருந்து அவங்களுக்கு ஏதோ பிடிக்கல, கோபமா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

பொண்ணுங்கன்னா யாரையும் சார்ந்திருக்காம, தன் கால்ல சுதந்திரமா இருக்கணும்கிறது அவங்களோட எண்ணம். நாங்க பசங்கல்லாம், பிறரை எதிர்பார்க்காம எங்க கால்ல நிக்கிறோம்னா, அதுக்குக் காரணம் அவங்கதான்! என்னைப் பொறுத்தவரை, ஜெம்லி.. ‘எ ஸிம்பல் ஆஃப் மோட்டிவேஷன்’!’’

ராணி சண்முகம் (சரளாவின் கால் நூற்றாண்டுத் தோழி), சென்னை:
‘‘25 வருஷத்துக்கு முன்னால நாங்க கோடம்பாக்கத்துல இருந்தப்போ, எங்க எதிர்வீட்டுல குடியிருந்துச்சு ஜெம்லி (நாங்களும் அப்படித்தான் கூப்பிடுவோம்). அப்போ ஆரம்பிச்ச பழக்கம்! அப்புறம், சாலிகிராமத்துல சொந்த வீடு கட்டிக்கிட்டுப் போனாலும், நட்பு விட்டுப் போகல..

ஜெம்லியோட அம்மாவை நானும் ‘அம்மா’னுதான் கூப்பிடுவேன்.. அவங்களுக்கு அஞ்சு பொண்ணோட சேர்த்து, நானும் ஒரு பொண்ணாகிட்டேன்.. இப்பவும் கூட என்ன பண்டிகை, விசேஷம்னாலும் ஒரு தாய் வீட்டிலருந்து பொண்ணுக்கு சீர் வர்ற மாதிரி, ஜெம்லி வீட்லருந்து எனக்கு எல்லாம் வந்திடும்.

எல்லார் வீட்டுலயும் டிரைவர், வேலைக்காரங்க மாறிக்கிட்டே இருப்பாங்க இல்ல? ஆனா, ஜெம்லி வீட்ல மட்டும் அந்தக் காலத்திலருந்து இப்ப வரை, மேக்&அப் மேன்லருந்து டிரைவர் வரை எல்லாருமே பழைய ஆளுங்கதான்.. ஏன்னா, அவங்களுக்கு வீடு கொடுத்து, குழந்தைகளின் படிப்புச் செலவை ஏத்துக்கிட்டு, அவங்க குடும்பப் பிரச்னையை தன் பிரச்னையா நினைச்சு உடனே சரிசெய்ற ஜெம்லி இருக்கறப்போ, அவங்க ஏன் வேற இடத்துக்குப் போகப் போறாங்க!

திரையில் எல்லாரையும் சிரிக்க வைக்கிற என் தோழி, நிஜத்தில் ஒரு மெழுகுவர்த்தி மாதிரி! தன் குடும்பத்தினருக்காக சின்ன வயசிலருந்து உழைச்சு, உடன்பிறந்தவங்க பசங்களைத் தன் புள்ளைங்க மாதிரி வளர்த்து, ஆளாக்கி, படிக்க வச்சு, கல்யாணமும் பண்ணிப் பார்க்கும் பெரிய மனசுக்காரி! ‘தாயைக் காத்த தனயன்’னுதான் கேள்விப்பட்டிருக்கோம்.. ஆனா தாயைக் கண் போலக் காத்திட்டிருக்கிற மகள் இவ!

ஒருசமயம் எனக்கு அப்பண்டிசைடிஸ் ஆபரேஷன் ஆகி, ஆஸ்பத்திரியில இருந்தேன்.. அந்த சமயம் ஜெமிக்கு நல்ல ஜுரம்.. முதல் நாள் தான் அது ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்திருக்குது. ஆனா, நான் அட்மிட் ஆகியிருக்கறதைக் கேள்விப்பட்டு, ஜுரத்தோட வந்து, மூணு மாடி ஏறிவந்து, ‘உனக்கு ஒண்ணும் இல்லடி.. பயப்படாத.. தைரியமா இரு!’னு சொல்லிட்டுப் போச்சு. அந்த அன்பும் கரிசனமும் என்னை உருக்கிடுச்சு!

ஒருமுறை ஷீர்டி போய்ட்டு வந்தப்ப, எனக்காக அங்கருந்து ஒரு பாபா சிலை வாங்கிட்டு வந்துச்சு.. ‘எனக்காக நீ பாபாகிட்ட வேண்ட, வேண்ட.. நான் நல்லாயிருப்பேன் ராணி’னு சொல்லுச்சு! இப்பவும் எங்க பூஜையறையில இருக்கும் அந்த பாபாகிட்ட தினமும் நான் அவளுக்காக வேண்டறேன்.. ஜெம்லி இன்னும் நல்லா, சிறப்பா, சந்தோஷமா இருக்கணும்னு!’’

- பிரேமா நாராயணன்