May 26, 2009

உஷார்! உங்களுக்கும் இது ஒரு பாடம்!

சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் பிரம்மாண்டமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனை..

இலவச மருத்துவ சிகிச்சைப் பகுதியில், இரண்டாம் தளத்திலிருந்த பெண்கள் வார்டின் கடைசி வரிசையில் முதல் கட்டில்.. கட்டில் சைஸுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல், சிறிய மைனாக்குஞ்சு போல உட்கார்ந்திருந்தார் அந்த அம்மையார். வயது 86.

‘‘மணி என்ன இப்போ? ஆறே முக்கால் ஆச்சா? அப்ப, இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு கொண்டுவந்துடுவான்..!’’ என்று மூன்றாவது தடவையாக சொல்லிவிட்டு, அந்த வார்டின் வாசல்புறம் பார்த்துவிட்டு நம்மைப் பார்த்துச் சிரித்தார். ஆங்காங்கே சில பற்கள் விழுந்திருக்க, குழந்தையின் சிரிப்புப் போன்றிருந்தது அது.

புன்னகைக்கத் தோன்றாமல், வயிற்றைப் பிசைந்தது நமக்கு!மூப்பு காரணமாகக் குறுகியிருந்த உடலைவிடப் பெரிய சைஸிலான நைட்டி.. கால்களுக்குக் கீழே விழுகிறது என்பதால் இடுப்பில் கொஞ்சம் சுருட்டி, ஒரு நாடாவை வைத்துக் கட்டி விடப் பட்டிருந்தது. கண்ணாடிக்குப் பின் கருவிழிகள் கூர்மையாக போவோர் வருவோரை அலசியபடியிருக்க, வாய் அவர்களைப் பற்றியோ, அந்த வார்டு, அதன் தலைமை மருத்துவர், டியூட்டி நர்ஸ்கள், சக படுக்கை நோயாளிகள் பற்றிய ஏதாவது ஒரு தகவலை உதிர்த்தபடி இருந்தது.

கட்டில் அருகிலேயே வாக்கர்! அதில் காயும் ஒரு நைட்டி, ஒரு துண்டு. அவரருகே ஒரு டைரி, ஒரு பேனா.. ஒரு மொபைல். இடதுபுறமிருந்த வெள்ளை நிற குட்டி அலமாரியில் சில பிஸ்கெட் பாக்கெட்டுகள், இரண்டு ஆப்பிள், ஒரு தட்டு, இரண்டு டம்ளர்.. தண்ணீர் (கூல்ட்ரிங்க் வந்த) பாட்டில்கள்..
இந்த அம்மையார், ஒரு காலத்தில் இலக்கிய உலகின் முடிசூடா ராணியாக விளங்கியவர் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
கணவருக்கு மிக உயர்ந்த அரசுப் பணி. கை நிறைய சம்பளம். இந்த அம்மையார் எழுதிக் குவித்ததும் அதன் மூலம் அவர் பெற்ற விருதுகளும் ஏராளம்.. ஏராளம்! இன்று பல்கலைக் கழகங் களில்கூட அவருடைய எழுத்துக்கள் பாடமாக இருக்கின்றன. சென்னையில் சொந்தவீடு, வங்கியில் கணிசமான இருப்பு, நகைகள், வீடு கொள்ளா விருதுகள் என ராணி போல வளைய வந்தவர்தான்.. ஆனால், உறவினர்கள் மேல் வைத்த அதீத நம்பிக்கையும், வளர்ப்பு மகன் மேல் கொண்ட அளவற்ற பாசமும் அவரை இப்படி ஒரு பரிதாப நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது.

நாம் அவரை ‘அம்மா’ என்றே அழைப்போம். அம்மாவுக்கு பூர்விகம் தஞ்சாவூர்ப் பக்கம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, கணவருக்கு அடிக்கடி மாற்றல் வரும் உத்தியோகம். புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர்கள் என்றால் அம்மாவுக்கு அல்வா சாப்பிடுவது போல! அந்த சூழலையும் அந்த மனிதர்களையும் தனது அடுத்த கதையிலோ, நாவலிலோ பதிவு செய்துவிடுவார். இப்படி, மனைவிக்கு பிடிக்கும் என்பதாலேயே யாருமே போக விரும்பாத மலைப்பிரதேசங்கள், கிராமங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் என்றாலும்கூட கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிடுவார் கணவர். அப்படி ஒரு காதல் வழியும் தம்பதி!

அவர்களுக்கு ஒரே குறைதான்! திருமணமாகி ஆண்டுகள் பல ஆகியும், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. முற்போக்குக் கருத்துக்களும் பெண்ணுரிமைவாதியுமான அம்மா, அதை ஒரு சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொண்டார். அதிகம் கவலைப்படவோ, கோயில், பிரார்த்தனை என்று போகவோ செய்யவில்லை. யதார்த்தத்தை அது வரும் போக்கிலேயே எடுத்துக்கொண்டு வாழ்ந்தனர்.

அம்மாவுக்கு சகோதர, சகோதரிகள் அதிகம். அவர்களின் குழந்தைகளுக்குப் பிரியமான அத்தையாக, சித்தியாக இருந்தார். தனக்குப் பிள்ளை இல்லாத குறை தீர, உடன்பிறந்தவர்களின் குழந்தை களைக் கொஞ்சி மகிழ்ந்தார். அதில் ஒரு குழந்தை இவரிடம் அதிகமான ஒட்டுதலுடன் வளர்ந்தது. இவர்கள் வீட்டிலேயே, வளர்ந்து பெரியவனாகி, வேலைக்கும் போனார் அந்த வளர்ப்பு மகன். தன்னுடைய பாசம் முழுவதையும் அந்த மகன் மீது கொட்டி வளர்த்தார் அம்மா.

ஆனால், அத்தனை பாசமும் மிகப்பெரிய கேள்விக் குறியாக நின்றது, எட்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் இறந்தபோது!
அம்மாவின் கணவர் இறந்தபோது, வந்த ஜனக்கூட்டம் போனபோது வீடு ‘வெறிச்’ என்றானது. உறவினர்களும் போனபிறகுதான், அம்மாவுக்கு ‘தான் தனிமரமாக’ நிற்பது உறைத்தது. என்ன எழுதி என்ன பயன்? அவருடைய தனிமையைப் போக்க எதுவுமே உதவவில்லை. ‘சொந்தங்கள்தான் இருக்கிறதே!’ என்று அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லோருக்கும் போன் செய்தபோது.. அவர்கள் சொன்ன பதில் -

‘‘அவ்வளவு பெரிய வீட்ல நீ மட்டும் இருக்காத.. யாராவது வந்து, உன்னை ஏதாவது பண்ணிட்டு, இருக்கறதை கொள்ளையடிச்சிட்டுப் போயிடப் போறாங்க! வீட்டை வித்து, பேங்க்&ல போட்டுட்டு எங்க வீட்டுக்கு வந்துடு. நீ எங்க கூடவே இருந்துக்கலாம்!’’

அப்புறம் நடந்ததெல்லாம் இவர் கைமீறிய விஷயங்கள்தான்!

மூன்று கிரவுண்டில் இருந்த அந்தப் பெரிய வீடு.. அம்மாவும் அவருடைய கணவரும் பார்த்துப் பார்த்துக் கட்டிய கனவு மாளிகை.. அம்மாவின் எழுத்துக்களுக்கு உயிர் தந்த அதன் மலர்த் தோட்டம்.. விலை பேசப்பட்டது.
வீட்டை விற்ற பணத்தை அக்கவுன்ட்டில் போட்டார்கள். வாங்கிய பார்ட்டிக்கு வீட்டை ஒப்படைக்கும் முன்பு, மாபெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர் சொந்தங்கள். ‘‘அத்தை.. இந்த வெள்ளிப்பிடி போட்ட வாக்கிங் ஸ்டிக் மாமாவோடதுதானே! நான் வச்சுக்கறேன்..’’ என்று ஒரு மருமகள், ‘‘பெரீம்மா.. இந்தத் தங்க முலாம் பூசின நடராஜர் சிலை, உனக்கு அந்த இலக்கிய விழால கொடுத்ததுதானே! இந்த மாதிரி ஒரு சிலையைத்தான் எங்க பூஜை ரூம்க்காக ரொம்ப நாளாத் தேடிண்டிருக்கார் இவர்!’’ என்று ஒரு மகள்.. இப்படி ஆளாளுக்கு கைக்குக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு போக.. வேண்டாவெறுப்பாக அம்மாவைத் தன்னோடு அழைத்துச் சென்றார், வளர்ப்பு மகன். ஆனால், அந்த வளர்ப்பு மகனும் கடைசியில் அநாதரவாக விட்டதுதான் கொடுமை!

அப்படி, இப்படி என்று ஒவ்வொரு வீட்டிலுமாக அம்மாவைப் போட்டு இழுத்தடித்து, கடைசியாக மீண்டும் வளர்ப்பு மகன் வீட்டுக்கே வந்தபோது... அங்கே அழுது வீங்கிய கண்ணும் முகமுமாக வரவேற்ற மகனும் மருமகளும், ஒரு பெரிய ‘சோகக் கதை’யை எடுத்து விட்டிருக்கிறார்கள். தங்களின் பிசினஸில் பயங்கர நஷ்டம் என்றும், கடன் தொகை 98 லட்சமாக உயர்ந்துவிட்டதென்றும், உடனே கட்டவில்லை என்றால், குடும்பத்தோடு கம்பி எண்ண வேண்டுமென்றும்.. கதாசிரியருக்கே கதை சொல்லியிருக் கிறார்கள்.
அப்பாவி அம்மாவுக்கு பாசம் கண்களை மறைத்தது. என்ன ஏதென்று கூடக் கேட்காமல், தன் பேங்க பாலன்ஸ், நகைகள் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.
அதன் பிறகுதான் கொடுமையான க்ளைமாக்ஸ்!

‘கடன்களை செட்டில் செய்துவிட்டாலும், பெருத்த அவமானம் ஏற்பட்டு விட்டதால் இந்த ஊரில் இனி இருக்க முடியாது’ என்றும் ‘தாங்கள் ஊரை விட்டே போகப் போவதால், தங்களால் இனி அம்மாவை வைத்துப் பராமரிக்க இயலாது’ என்றும் அந்த வளர்ப்பு மகன் நீலிக்கண்ணீர் வடிக்க.. கரைந்து போனார் அம்மா!

அதுதான் சாக்கு என்று அவரை முதன் முதலாக முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்.

‘‘கேக்காத.. அந்தக் கண்றாவிக் கதையெல்லாம் கேக்காத.. என் பணம், நகை போகட்டும்.. அதெல்லாம் யாருக்கு வேணும்? ஆனா.. நான் உயிரா நேசிச்ச என் புத்தகங்கள்.. அற்புதமான என் லைப்ரரி.. என் திறமைக்கு கிடைச்ச அவார்டுகள்.. மெடல்கள்.. எல்லாம் இப்போ எங்கே இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது.. எனக்கு சொத்துனு.. இதோ இந்தக் கட்டிலைச் சுத்தி இருக்கற சாமான்கள்தான்!’’ என்று அவர் கதறியபோது.. காணச் சகிக்கவில்லை.
அப்போது நீலநிறச் சீருட அணிந்த பணியாள் ஒருவர் வந்து நர்ஸிடம் ஏதோ பேசிவிட்டுச் செல்ல..

‘‘அதோ அவர்தான் சாப்பாடு கொண்டுவர்றவர்.. எல்லாருக்கும் ரெண்டு சப்பாத்தி.. சாதம்! எனக்கு மட்டும் மூணு சப்பாத்தி, கூட்டு! கூட்டு கொஞ்சமாத்தான் கொடுப்பா.. நான் சாயந்தரம் தர்ற பாலை வாங்கி, குடிக்காம வச்சிருப்பேன்.. அதை சப்பாத்தில் ஊத்தி சாப்பிட்ருவேன்!’’ என்றார்.
‘கடவுளே...!’’

அந்தி சாய்ந்துவிட்டது. மிகப் பெரிய அந்த வளாகத்தின் மரத்து பறவைகள் ஏகப்பட்ட இரைச்சலுடன் கூட்டில் அடையத் தொடங்கியிருந்தன.
நீலச் சீருடை ஆளையே பார்த்தபடி பேசினார் அம்மா..
‘‘என்னை ஓல்ட் ஏஜ் ஹோம்ல விட்டதுக்கு, ஏதாவது நரகத்துல விட்டிருக்கலாம்.. கொடுமைம்மா அது! எல்லாரையும் டாய்லெட் கூட்டிட்டுப் போய் வர்றதுக்கு சங்கடப்பட்டு, மூத்திர ட்யூப் மாட்டிவிட்ருவாங்க.. எழுந்து நடக்கறப்ப, அதைத் தூக்கிண்டே நடக்கணும்.. இப்படி அங்கே நிறைய அக்கிரமங்கள்! எப்படியோ ரெண்டு வருஷம் ஓட்டினேன்.. முதல்ல வந்து பார்த்த சொந்தங்கள், அப்புறம் போன் விசாரிப்போட நிறுத்தினாங்க. அதுக்கப்புறம், அவங்க கூப்பிட்டப்போ, நான் பேசறதை நிறுத்திட்டேன். என் கணவரின் பென்ஷனையும் ஏதோ பண்ணிட்டாங்க.. எனக்கு வர்றதில்ல. என்னம்மா சொந்தம் பந்தம் எல்லாம்!’’ & விரக்தியின் உச்சத்தில் கண்ணீர்கூட காய்ந்து விட்டது.

‘‘நல்ல நடை உடையாப் போன நான், அங்கே வழுக்கி விழுந்ததில நடக்க முடியாம, வாக்கர் வச்சு நடக்கற நிலைமைக்கு ஆளாயிட்டேன்! என்னால இனிமே அங்கே இருக்கவே முடியாதுன்றபோது, எனக்கு உன்னை மாதிரி பத்திரிகை உலகத்துல இருக்கற நண்பர்களும் சிலருமா சேர்ந்து என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தாங்க... வந்து நாலு மாசமாகுது..
ஆனா அம்மா.. இந்த ஹாஸ்பிடல்ல சும்மா சொல்லக் கூடாதும்மா.. ஃப்ரீ வார்டுன்னாலும் கவனிப்புக்கு எந்தக் குறையுமில்ல. தினமும் மதிய சாப்பாடு, சீஃப் டாக்டர் வீட்டிலருந்து வருது.. டாக்டருக்கு சாப்பாடு கொடுத்தனுப்பும்போது, எனக்கும் கொஞ்சம் சாதம், காய்கறிகள், கீரை, பழங்கள்னு கொடுத்தனுப்புறாங்க.. நான் தத்தெடுத்த புள்ளை என்னைத் துரத்திவிட்டுட்டான்.. ஆனா, இப்போ என்னைத் தத்தெடுத்துக்கிட்ட டாக்டரின் கருணையால நான் உயிரோட இருக்கேன்!’’ என்றவர், ‘‘ஸ்,.. அப்பா..’’ என்று வலியில் முனகியபடி, திரும்பி அமர்ந்தார்.

‘‘இடுப்பும், முதுகும் வலி கொல்லுதும்மா.. நேத்து நைட் முழுதும் தூங்க முடியாம புரண்டு படுக்க முடியாம மரண அவஸ்தைப்பட்டேன்.. இன்னிக்கு ராப்பொழுது எப்படிப் போகப் போகுதோ.. தெரியலியே! ராத்திரி வந்தாவே பயமா இருக்கும்மா! யம்மாடி.. பசிக்குது.. இன்னும் சாப்பாடு வரலியே!’’ என்றவர், ‘‘அந்தப் பையில் பிஸ்கட் இருக்கு.. எடுத்துத் தர்றியாம்மா?’’ என்றார்.
நாம், ‘‘ஆப்பிள் நறுக்கித் தரட்டுமா?’’ என்றதும், ‘‘கத்தியெல்லாம் கிடையாதும்மா’’ என்றார்.

பக்கத்து ‘பெட்’காரரிடம் கேட்டு கத்தி வாங்கி, ஆப்பிளைக் கழுவிவிட்டு, நறுக்கித் தர.. வேகம் வேகமாக எடுத்துச் சாப்பிட்டார். பாவமாக இருந்தது!
எத்தனை நாடுகளைப் பார்த்தவர்.. எத்தனை உயர்மட்ட விருந்துகளில் கலந்துகொண்டவர்.. எத்தனை நட்சத்திர ஹோட்டல்களில் இவருக்குப் பாராட்டு விழா நடந்திருக் கும்.. இவரது கணவருடன் எங்கெல்லாம் போய் உணவு அருந்தியிருப்பார்.. வீட்டில் எப்படி எல்லாம் விதம்விதமாக சமைத்து சாப்பிட்டிருப்பார்..!’

ஒரு நிமிஷம் நாம் உணர்வுகளில் கரைய, கண்களை நீர் மறைத்தது.
தூரத்தில் உணவு வண்டி தெரிந்ததும் அனைத்து நோயாளிகளின் அட்டெண்டர்களும் சுறுசுறுப்பாகத் தயாரானார்கள், க்யூவில் நிற்க!
‘‘தட்டைக் கொடுங்கம்மா.. நான் வாங்கிட்டு வரேன்..’’ என்றதும், ‘‘ஊஹூம்.. உன்னை அவருக்குத் தெரியாது.. புது ஆளுனு ரெண்டு சப்பாத்தி போட்ருவார்.. எப்போதும் வாங்கற ஆயா வாங்கினாதான் மூணு சப்பாத்தியும் நிறையக் கூட்டும் போடுவார்!’’ என்று பரிதவித்தார்!

அய்யோ.. கொடுமையே!

ஆயா கொண்டுவந்த தட்டில் சூடான சப்பாத்திகளைப் பார்த்ததும், பஞ்சடைந்திருந்த அந்தக் கண்களில் அப்படி ஒரு ஒளி! ஏதோ ஒரு வாரம் சாப்பிடாதவர் போல அவ்வளவு வேகமாக பிய்த்து வாயில் போட்டார். நாம் பாட்டிலில் இருந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டுக் காத்திருந்தோம்.

‘‘எனக்கு சுகர் இருக்கே! அதனால சர்க்கரை தொட்டுக்கக் கூடாது!’’ என்றவர் சாப்பிட்டு முடிக்க, தட்டை எடுத்துச் சென்று கழுவி வந்தோம்.
‘‘இது யாரு பாட்டி.. உங்க பேத்தியா?’’ - பக்கத்து பெட்டில் இருந்த அம்மா விசாரிக்க..

‘‘எங்க பத்திரிகைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க..’’ என்று சந்தோஷமாக அறிமுகப்படுத்தினார்.

அந்த அம்மா நம்மைப் பார்த்து, ‘‘பாவம்மா இந்தப் பாட்டி.. ஏதாவது எழுதுவாங்க.. படிப்பாங்க.. சீஃப் டாக்டர்கிட்டே போய்ப் பேசிட்டு வருவாங்க.. மத்தபடி இவங்களைப் பார்க்க எப்பவாவது வர்ற ஒருத்தரைத் தவிர யாருமே வர்றதில்லம்மா!’’ என்றார்.

‘‘ஆமாம்மா.. இங்கே பாத்தியா.. எல்லா ‘பெட்’டுக்கும் அட்டெண்டர் உண்டு.. எனக்கு மட்டும்தான் யாரும் கிடையாது. அதேமாதிரி இங்கே யாருக்காவது என்னை மாதிரி முழுசா நரைச்சிருக்கா பாரு.. எல்லாம் சின்னப் பொண்ணுங்க.. அதுக்குள்ள ஏதேதோ வியாதி வந்து அட்மிட் ஆகியிருக்காங்க.. நான் ஒருத்திதான் இவ்வளவு வயசாகி, முதுமையினால இங்க வந்திருக்கேன்!’’ என்று சர்வசாதாரணமாகச் சொன்னபடி மீதமிருந்த பாலை வாயில் ஊற்றிக் கொள்கிறார் அம்மா.

‘‘எனக்கு யார் யாரோ உதவ வர்றதா சொல்றாங்கம்மா..என் தன்மானம் அதையெல்லாம் ஏத்துக்கறதுக்கு இடம் கொடுக்கலம்மா.. நான் அப்படி ஒரு வாழ்க்கை வாழலியே! இந்த நிலமையில அது தப்பு இல்லேன்னாலும் என் மனசு சம்மதிக்கலயே..’’ என்று தன்னிலை விளக்கம் கொடுக்கும் அம்மா, கீழே விழுந்ததில் எழுத வராமல் இருந்த தன் விரல்களுக்கு, இரண்டு குயர் பேப்பர் வாங்கித் தரச்சொல்லி எழுதி எழுதிப் பயிற்சி கொடுத்து, இப்போது ஒருவிதமாக, புரியும் அளவுக்கு எழுதுகிறார்.

டயரி முழுவதும் கவிதைகள். பணம், தேர்தல், தெருநாய், செவிலியர்கள் (அந்த மருத்துவமனை நர்ஸ்கள் பற்றி).. இப்படி எக்கச்சக்க கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்துக் காட்டுகிறார்.
‘‘நேரமாயிடுச்சு போலயே! இருட்டிப் போயிடுச்சே! நீ எப்படிம்மா போவ? உங்க வீடு எங்கே இருக்கு?’’ - அக்கறையோடு கேட்கிறார். நமக்கோ அங்கிருந்து கிளம்பவே மனசில்லை.

‘‘சரிம்மா. பத்திரமா கிளம்பு.. இன்னிக்கு பொழுது எப்படி ஓடப் போகுதோ, பகவானே’னு நினைச்சிட்டிருந்தேன்.. பகவான்தான் உன்னை அனுப்பி இருக்கார்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீ வந்தது... இதிலேயே நான் தூங்கிப் போயிடுவென்!’’ - என்றவரிடம் மீண்டும் அந்தக் குழந்தைச் சிரிப்பு!
தாளமுடியாத வலியுடன், அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அந்த வார்டை கடந்து படிகளில் இறங்கியபோது, கன்னங்களில் உருண்டது கண்ணீர்.

ச்சே...! என்ன வாழ்க்கை!

- நமது நிருபர்

May 3, 2009

முதுகு வலிக்கு செலவே இல்லாத வைத்தியம்

டாக்டர், எனக்கு 34 வயதாகிறது. முதுகுவலியால் கஷ்டப்படுகிறேன். டூ&வீலர் இல்லாமல் என்னால் வேலை பார்க்க முடியாது. நண்பர்களோ, வண்டி ஓட்டியதால்தான் இந்த முதுகு வலி என்கிறார்கள். முதுகு வலியை குணப்படுத்த ஏதாவது பயிற்சிகள் உள்ளதா?
- கே.எம். மஞ்சுநாத், பெங்களூர்.
டாக்டர் ஜெயலஷ்மி: ''டூவீலர் ஓட்டுவது, கம்ப்யூட்டர் முன்பாக அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது போன்றவற்றால் பலருக்கு இப்போது முதுகு வலி ஏற்படுகிறது.
கைகளைப் போன்றே நமது கால்களிலும் உடலின் பிரதிபலிப்புப் புள்ளிகள் அமைந்துள்ளன. பாதத்தின் பக்கவாட்டுத் தோற்றம் நமது முதுகுத் தோற்றத்தை போலவே இருக்கிறது.
பாதத்தில் உள்ள புள்ளி களை வரிசையாக அழுத்தும் போது, எந்த புள்ளிகளில் அதிக வலி ஏற்படுகிறதோ, அந்தப் புள்ளிக்குரிய முதுகுப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கண்டு கொள்ளலாம்.
காலை, மாலை இரு வேளைகளும் இந்தப் புள்ளிகளில் 14 தடவை அழுத்தம் கொடுத்துத் தளர்த்தி வரவும்.
ஒரு கட்டத்தில், காலில் உள்ள புள்ளிகளை அழுத்தும்போது, வலி இருந்த இடத்தில் வலி குறைந்திருப்பதை உணர்வீர்கள். அப்போது, முதுகு வலியும் நன்றாகவே குறைந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த மாத ‘மல்லிகை மகள்’ இதழ் பாருங்கள்!

May 2, 2009

வணங்குகிறேன்.. வரவேற்கிறேன்!


அன்பிற்கினிய வாசகப் பெருமக்களே..

வணக்கம்! ‘சுப வரம்’ என்னும் இந்த பச்சிளம் சிசுவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கும் தங்களுக்கு, முதலில் இதயங்கனிந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். இனியதொரு இறை அனுபவத்துக்குள் பிரவேசிக்கும் முன்பு, உங்களோடு சில வார்த்தைகள்..

ஓர் ஆன்மிக இதழுக்கு இப்போது என்ன தேவை? எத்தனையோ நல்ல நல்ல ஆன்மிக இதழ்கள் இருக்கும்போது ‘சுப வரம்’ இதழுக்கான அவசியம் என்ன? இது என்ன புதிதாக சொல்லப் போகிறது?

இந்தக் கேள்விகள் உங்கள் மனதில் நிழலாடும்.

இளைய தலைமுறையும் ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தத் தொடங்கியிருக்கும் இன்றைய வரவேற்கத்தக்க சூழலில், அவர்களுக்கு ஆன்மிகத்தை எளிய தமிழில், புரியும் வண்ணம் எடுத்துச் சொல்ல ஒரு ஆன்மிக இதழ் தேவைதான். விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று விதவிதமான திசைகளில் வெற்றிக்கொடி நாட்டினாலும், மனிதன் இறுதியில் சரண் அடைவது இறைவனின் பாதக் கமலங்களில்தான். அப்படியொரு அற்புதம் பற்றிச் சொல்ல எத்தனை நல்ல இதழ்கள் வந்தாலும் போதாதுதானே!

இதைத் தவிர, ‘சுப வரம்’ இதழுக்கு தனித்த நோக்கம் ஒன்றும் இருக்கிறது.

யானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் குட்டிக் கதை ஒன்று..

ஒரு பெருங்கடலில், சின்னஞ்சிறு அலை ஒன்று உருண்டு புரண்டு கரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ‘ஐயோ, கரையை அடைந்ததும் என் வாழ்க்கை முடிந்துவிடுமே’ என்று கவலை கொள்கிறது. அந்த சமயம், பேரலை ஒன்று சீற்றத்துடன் இதன் பின்னே வர.. ‘ஐயய்யோ, இது என்னை விழுங்கப் போகிறதே.. என்னைக் காப்பாற்ற யாரும் இல்லையா?’ என்று ஓலமிடுகிறது.

அப்போது அந்தப் பேரலை இதைப் பார்த்து கனிவோடு கூறுகிறது & ‘‘கவலைப்படாதே சிற்றலையே! நீ அழிந்துபோக மாட்டாய். நீ கண நேரமே தோன்றும் சின்னஞ்சிறு அலை மட்டுமே அல்ல. உன்னைப் படைத்த இந்தப் பெருங்கடலின் மாறுதலற்ற உண்மையான தண்ணீரே ஆவாய்! இந்தக் கடலே உன்னை, என்னை.. இன்னும் எத்தனையோ அலைகளை படைத்த கடவுள்! இந்தக் கடல், உன்னிடம், என்னிடம் மற்ற அலைகளில்.. என்று எங்கும் பரவி இருக்கிறது. உண்மையில் நீயும் தண்ணீர்தான். இந்தக் கடலும் தண்ணீர்தான். தண்ணீரான உனக்கு அழிவே இல்லை!’’

இதைச் சொன்ன தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், ‘‘கடலும் அலையும் உண்மையில் எப்படி ஒரே தண்ணீராகுமோ.. அப்படித்தான் இறைவனும் நீயும் உண்மையில் அளவற்ற ஒரே சைதன்யம் ஆவீர். சைதன்யமான உன்னிடத்தில்தான் இந்த அனைத்துலகும் இருக்கிறது. அதைப் படைத்த இறைவனும் இருக்கிறான்..’’ என்கிறார்.

ப்படியாக, ‘தெய்வம் நீ என்று’ உணரவைக்கும் முயற்சிதான் ‘சுப வரம்’! புற உலகின் தாக்கங்களால் தினம்தினம் பெருகிவரும் மனவேதனைகளை துடைத்து எறிய வைத்து, தளர்வறியா மனம் தரும் இதழாக இது விளங்கும். இந்த வாழ்க்கையே ஒரு வரம்தான் என்பதை உணர்த்தி, மகிழவைக்கும்.

இந்த முயற்சிக்கு உங்களின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். இதழை ஆழமாக படித்துப் பார்த்து, உங்களின் விமர்சனங்களால் தொடர்ந்து எங்களை வழிநடத்த வேண்டுகிறேன்.

இந்த இதழ் பற்றிய உங்கள் கருத்தறிய எங்கள் குழுவே ஆவலோடு காத்திருக்கிறது.

நன்றியுடன்

ம.கா.சிவஞானம்

ஆசிரியர்

பரவச யாத்திரை

சுபவரம் - அறிமுக இதழிலிருந்து..
அகோபிலம்.. ஆனந்தம்!
‘இயற்கை அழகோடு சேர்த்து இறை அனுபவமும் கிடைக்கவேண்டும்.. அதற்கு எங்கே போகலாம்?’ என்று யோசித்து, கடைசியில் நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் தான், ஆந்திராவிலுள்ள அகோபிலம்!
அகோபிலம் - தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடம்! இங்கே நல்லமலா காட்டுக்குள் நரசிம்மமூர்த்திக்கு கட்டப்பட்டுள்ள ஒன்பது ஆலயங்கள்தான் விசேஷம்!
எட்டு பேர் குழுவாக, சென்னை கோயம்பேட்டில் இரவு பஸ் ஏறினோம். 9 மணி நேரப் பயணத்தில் நாங்கள் அடைந்த இடம் & நந்தியால் அருகிலுள்ள ‘அல்லக்கட்டா’. ஏகப்பட்ட தங்கும் விடுதிகளும், எங்கு பார்த்தாலும் டிராவல் ஏஜன்ஸிகளுமாக.. சகல சௌகரியமான ஊர்!
ஒரு ஹோட்டலில் அறை எடுத்து, குளித்து, சாப்பிட்டுவிட்டு ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். 2 மணி நேரப் பயணத்தில், அகோபிலம் நெருங்கிவிட்டோம் என்பதை அந்த ஜிலீர் காற்று அறிவித்தது.
அகோபிலம் மலையடிவாரத்தில், உள்ளூர் மக்கள் சிறிய அளவிலான டீக்கடைகள் மற்றும் ஜூஸ் ஸ்டால்கள் வைத்திருக்கிறார்கள். அவரவர்க்குப் பிடித்த ஜூஸை குடித்துவிட்டு, ஆளுக்கொரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு மலையேற ஆரம்பித்தோம். ஒரு பையன் ‘கைடாக வருகிறேன்!’ என்றான். 150 ரூபாய் தர சம்மதித்து, அவனையும் கூட்டிக் கொண்டோம்.
நவ நரசிம்மர்கள் ஆங்காங்கே இருக்கிற மலைக் குன்றுகளில் தனித் தனியாக கோயில் கொண்டிருக் கிறார்கள். சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற மரங்களும், சுத்தமான குளிர் காற்றும் நம் கண்களை கட்டிப் போடுகின்றன.
முதல் மூன்று நரசிம்மர் கோயில்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாகத் தான் தோன்றியது. அருகே போனாலோ, செங்குத்தான, ஏறுவதற்கு சிரமமான படிக்கட்டுகள். அந்த மூன்று நரசிம்மர்களை தரிசிப்பதற்குள்ளேயே, எல்லாருடைய தண்ணீர் பாட்டில்களும் காலி! கைடாக வந்த பையன், அழகிய ஒரு ஓடையைக் காட்ட, அங்கே தாகத்தைத் தணித்துக் கொண்டு, அடுத்தடுத்த நரசிம்மரைத் தேடிப் போனோம்.
ஒரு நரசிம்மர் சந்நிதிக்கு அருகிலேயே ‘பிரகலாதா பாறை’ என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் பிரகலாதன் கல்வி கற்ற இடமாம்! கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் அளவிற்கு பரந்து கிடக்கிறது அந்தப் பாறை. அடர் ஆரஞ்சு நிறத்தில் மின்னுகிற அந்தப் பாறை முழுவதும் தெலுங்கு மொழியில் ஏதேதோ எழுதப்பட்டிருக்கிறது. அவை எல்லாம் பிரகலாதன் எழுதியவை என்கிறார்கள்.
அதற்கு மேல் நடக்க கால்கள் ஒத்துழைக்காததால், அறைக்குத் திரும்பிவிட்டோம். முதல் நாளில் 6 நரசிம்ம மூர்த்திகளைப் பார்த்திருந்தோம். அவை அனைத்தும் நாங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருந்தன.
மலையின் அடிவாரத்திலேயே கோயில் சார்பில் இலவச உணவு வழங்கப்படுகிறது. மதிய சாப்பாடு தேவை என்றால் காலை 9 மணிக்கே இத்தனை பேருக்கு உணவு வேண்டும் என்று தெரிவித்துவிட வேண்டும். சுவையான சாப்பாடு!
மறுநாள், எஞ்சியுள்ள 3 கோயில்களை தரிசிக்கக் கிளம்பினோம். ‘மொத்தம் 14 கிலோ மீட்டர் தூரம் முழுவதும் காட்டிற்குள்ளேயே போக வேண்டும். சுமோ அல்லது ஜீப்பில் போவதாக இருந்தால் 11 கிலோ மீட்டர் வரை போகலாம். எப்படி இருந்தாலும் அடுத்த 3 கிலோமீட்டர் தூரத்தை நடந்துதான் கடக்கவேண்டும்’ என்றார்கள். எல்லாம் வல்ல எம்பெருமான் நாராயணனை தரிசிக்கப் போகிறோம்.. நாம் நடப்பதற்கான சக்தியை அவன் தராமலா போய்விடுவான்? எனவே, நடந்தே போவது என்று தீர்மானித்தோம்.
‘காட்டுக்குள் நிறைய கரடி வரும். அப்படி வந்தால், பயப்படாமல் மரங்களின் மீது ஏறிக் கொள்ளுங்கள். அவை பேசாமல் போய் விடும்’ என்று சிலர் எச்சரித்தார்கள். கொஞ்சம் பயத்துடனே தான் உள்ளே நடந்தோம். நல்ல வேளையாக கரடி எதுவும் எங்கள் கண்ணில் படவில்லை.
அடர்ந்த காட்டின் நடுவே இருந்த ஒரு நரசிம்மர் கோயில் அருகில் ஒரே மரத்தில் 20, 25 பெரிய தேன் கூடுகள் இருந்து, ரொம்பவே மிரட்டின.
அதன்பிறகு நாங்கள் அடைந்த இடம், பலி கொடுக்கும் நரசிம்மர் ஆலயம். கோயிலின் சுவர், தரை என எங்கு பார்த்தாலும் ரத்தத் திட்டுக்களும், ஆட்டு ரோமங்களுமாக நம்மை அச்சுறுத்தும் காட்சிகள்! இறுதியாக, நரசிம்ம ஸ்வாமி உக்கிரமாக ஹிரண்ய கசிபுவின் வயிற்றைக் கிழித்த இடத்தையும் பார்த்துவிட்டு திரும்பினோம்.
போக, வர என்று மொத்தம் 28 கிலோமீட்டர் நடை பயணம். எங்களில் சிலருக்கு செருப்பெல்லாம் கூட அறுந்துவிட்டது. ஆனாலும், களைப்பே தெரியவில்லை. அதுதான் ஆண்டவன் அருள் என்று புரிந்தது. பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நல்ல மழை வேறு. மலை மீது மழையில் நனைவது எத்தனை இதமான அனுபவம் என்பதை அப்போது தான் உணர்ந்தோம்.
அகோபிலத்திற்கு அருகிலேயே ஒரு சிவாலயமும் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளியே அமைந்திருக்கும் 32 அடி உயர பிரம்மாண்டமான நந்தி சிலை நம்மை மெய் மறக்க வைக்கிறது. இந்த சிவாலயத்திற்கு மிக அருகில், ஒரு அருவி கொட்டுகிறது. இந்த அருவி நீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியாதாம். நாங்கள் வியந்து போய் நிற்க, ‘‘நீங்கள் சிவனில் நம்பிக்கை கொண்டிருந்தால், இது அவன் முடியில் இருந்து வருகிற கங்கை நீர். உங்களால் இதன் மூலத்தை அறிய முடியாது’’ என்றார், அங்கிருந்த ஒரு பெரியவர். அந்த மாவட்டம் முழுவதும் செழித்து வளர்கிற வாழைத் தோட்டங்களுக்கு, இந்த அருவி நீரே ஆதாரமாம்!
இறையும், இயற்கையும் ஒன்றோடு ஒன்று பிணைந்து, நம் எண்ணங்களை நல்ல வண்ணம் செதுக்குகிற ஒரு இடம்! திவ்யமாய் தரிசனம் கிடைத்த திருப்தியில், மனமகிழ்ச்சியோடு சென்னை வந்து சேர்ந்தோம்.
- லஷ்மி நாராயணன், சென்னை-33.
சதுரகிரி.. சந்தோஷம்!
என் மனதில் நீண்ட நாள் கனவாக, சதுரகிரி மலை ஏறி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. ‘சதுரகிரி சென்று வந்தால் நினைத்த காரியம் நடக்கும்’ என்ற என் கொழுந்தன், அங்கே ஏழுமுறை சென்று வந்த அனுபவங்கள் பற்றியெல்லாம் விவரிக்கவும், அந்த ஆவல் இன்னும் அதிகரித்தது.
‘‘அடுத்த முறை செல்லும்போது சொல்லுங்கள்.. நாங்களும் வருகிறோம்’’ என்றேன் என் கொழுந்தனிடம். ‘‘உங்களால் மலை ஏற முடியுமா அண்ணி?’’ என்று அவர் கேட்டதற்கு, ‘‘மகாலிங்கமே துணை என்று ஏறுகிறேன்’’ என்றேன்.
அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாக, மதுரையிலிருந்து புறப்பட்டோம். சுமார் இரண்டரை மணி நேரம் பயணம் செய்து, தாணிப்பாறை என்ற இடம் வரை காரில் சென்றோம். அதன்பின் மலை ஏற வேண்டும். குடிப்பதற்கு நீரும், உணவும் அவரவர் பையில் எடுத்துக் கொண்டு, காலை ஆறரை மணிக்கு ஏற ஆரம்பித்தோம்.
எங்கள் குழுவிலிருந்த 15 பேரில் 6 பேருக்கு அதுவே முதல் பயணம்! பொதுவாக, எனக்கு கொஞ்சம் அதிகமாகப் படி ஏறினாலே மூச்சு வாங்கும். ஆஸ்துமா பிரச்னை உண்டு. அதனால் கொஞ்சம் மெதுவாகத்தான் ஏறினேன். என் கணவர், எனக்காக என்கூடவே மெதுவாக வந்தார்.
பயணம் ஆரம்பமாகும்போது, கறுப்பு, வெள்ளை நிறம் கலந்த ஒரு நாய் எங்கள் பின்னாடியே வந்தது. எனக்கு நாய் என்றாலே பயம். ஆனால், விரட்டினாலும் அது போகவில்லை. நாங்கள் ஏறமுடியாமல் உட்கார்ந்த இடமெல்லாம், அதுவும் அமர்ந்து கூடவே வந்தது. ‘பிலாவடி கருப்பர்’ என்ற கோயில் வரை வந்தது. பிறகு காணோம். அந்த இடத்திலிருந்து மகாலிங்கக் கோயில் மிக அருகில்தான்.
கூடவே வந்து காணாமற் போன அந்த நாய் என் மனதை உறுத்திக் கொண்டிருக்கவும், முன்பே சதுரகிரிக்கு வந்திருந்த என் உறவினர்களிடம் விசாரித்தேன். அப்போது அவர்கள் சொன்னதுதான் சிலிர்க்க வைத்துவிட்டது.
‘எப்போதும் புதிதாக முதன்முதல் மலை ஏறும் பக்தர்கள் வழி மாறிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக, துணைக்கு பைரவர் வடிவத்தில் சித்தர்கள் வருவார்கள்’’ என்றார்கள் அவர்கள். சித்தர்கள் வாழும் மலை என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்?
கிட்டத்தட்ட நாலரை மணிநேரம் ஏறிய பிறகு, அந்த அற்புத, ‘சுயம்பு’ லிங்கமான சுந்தர மகாலிங்கத்தை தரிசித்தோம். அதற்கு வலதுபுறம் சுமார் 200 படிகள் ஏறி ‘சந்தன மகாலிங்கத்தை’யும் தரிசித்தோம்.
அவ்வளவு உயரம் ஏறியும், எனக்கு அன்று ஆஸ்துமா பிரச்னை வரவில்லை. இரண்டு அற்புத லிங்கங்களை தரிசித்த பிறகு, ஏறிவந்த களைப்பும் தெரியவில்லை.
சுந்தர மகாலிங்கத்தின் தரிசனம் கண்டு நான் அடைந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. ஆண்டவன் கருணையை அனுபவித்து உணர்ந்தால்தானே தெரியும்!
- உமாபாண்டியன், மதுரை -8.
புண்ணிய தலங்களுக்கு சென்று நீங்கள் பெற்று வந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும்!புண்ணிய தலங்களுக்கு சென்று நீங்கள் பெற்று வந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும்!