மல்லிகை மகள் - மார்ச் இதழின் தலையங்கம்..
ஏரியாக இருப்போம்!
வாழ்க்கைத் துயரங்களால் வலி கொண்ட ஒரு இளைஞன், தன் பழைய ஆசிரியரை நாடிச் சென்றான். தான் அனுபவிக்கும் வேதனைகளை எடுத்துச் சொன்னான்.
ஆசிரியர் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. கை நிறைய உப்புத் தூளை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடச் சொன்னார். பிறகு, அந்த தண்ணீரைக் குடிக்கச் சொன்னார். சில துளிகள்கூட குடிக்க முடியாமல் அவன் தவிக்க..
‘‘எப்படி இருக்கிறது இதன் சுவை?’’ என்று கேட்டார் ஆசிரியர்.
‘‘ஐயய்யோ.. வாயிலேயே வைக்க முடியலை சார்!’’ - முகம் சுளித்தான் இளைஞன்.
புன்னகைத்துக் கொண்ட ஆசிரியர், இன்னொரு கைப்பிடி உப்புத்தூளை எடுத்துக் கொள்ளச் சொல்லி, அருகிலுள்ள ஒரு ஏரிக்கு அவனை அழைத்துச் சென்றார். அந்த உப்புத்தூளை ஏரியில் போடச் சொன்னவர், பிறகு அந்த ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கச் சொன்னார். எந்தவித சங்கடமும் இன்றி அவன் அந்தத் தண்ணீரைக் குடிக்க..
‘‘எப்படி இருக்கிறது இதன் சுவை?’’ என்று கேட்டார்.
‘‘ம்.. நன்றாகவே இருக்கிறது!’’
‘‘உவர்ப்புச் சுவையை உணர்கிறாயா?’’
‘‘ம்..ஹூம்.. அது தெரியவே இல்லை..’’ - சந்தோஷமாக சொன்னான் இளைஞன்.
இப்போது அவன் அருகில் அமர்ந்து, அவன் கரங்களை ஆதரவாக எடுத்து வைத்தபடி ஆசிரியர் சொன்னார் - ‘‘வாழ்க்கையின் வலி என்பது இந்த கைப்பிடி உப்புத்தூள் போன்றதுதான். அதிகமும் இல்லை. குறைவும் இல்லை. அந்த வலி என்பது எப்போதும் மாறாமல் ஒரே அளவோடுதான் உள்ளது. ஆனால், அந்த வலியை நாம் உணர்வது என்பது, நாம் அதை வைத்திருக்கும் மனசின் விசாலத்தைப் பொறுத்தது. அதனால், வாழ்க்கை வலிகளால் கஷ்டப்படும்போது, நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உன் மனசை விசாலப்படுத்திக் கொள்வதுதான். டம்ளர் தண்ணீராக இருக்காதே. ஏரியாக இரு!’’
உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தில் ஆங்காங்கே வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு என்று பாதிப்புகள் பரவ.. அது எல்லோரது வாழ்விலும் பல்வேறு அம்சங்களில் எதிரொலித்து, வலிகளை உருவாக்கியபடி இருக்கின்றன.
இந்த நேரத்தில் நாம் பின்பற்றவேண்டிய மந்திரச் சொற்கள் இதுதான்.. ‘‘ஏரியாக இருப்பேன். டம்ளர் தண்ணீராக அல்ல!’’
1 comment:
நல்ல கதை! நல்ல கருத்து!
Post a Comment