May 2, 2009

பரவச யாத்திரை

சுபவரம் - அறிமுக இதழிலிருந்து..
அகோபிலம்.. ஆனந்தம்!
‘இயற்கை அழகோடு சேர்த்து இறை அனுபவமும் கிடைக்கவேண்டும்.. அதற்கு எங்கே போகலாம்?’ என்று யோசித்து, கடைசியில் நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் தான், ஆந்திராவிலுள்ள அகோபிலம்!
அகோபிலம் - தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடம்! இங்கே நல்லமலா காட்டுக்குள் நரசிம்மமூர்த்திக்கு கட்டப்பட்டுள்ள ஒன்பது ஆலயங்கள்தான் விசேஷம்!
எட்டு பேர் குழுவாக, சென்னை கோயம்பேட்டில் இரவு பஸ் ஏறினோம். 9 மணி நேரப் பயணத்தில் நாங்கள் அடைந்த இடம் & நந்தியால் அருகிலுள்ள ‘அல்லக்கட்டா’. ஏகப்பட்ட தங்கும் விடுதிகளும், எங்கு பார்த்தாலும் டிராவல் ஏஜன்ஸிகளுமாக.. சகல சௌகரியமான ஊர்!
ஒரு ஹோட்டலில் அறை எடுத்து, குளித்து, சாப்பிட்டுவிட்டு ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டோம். 2 மணி நேரப் பயணத்தில், அகோபிலம் நெருங்கிவிட்டோம் என்பதை அந்த ஜிலீர் காற்று அறிவித்தது.
அகோபிலம் மலையடிவாரத்தில், உள்ளூர் மக்கள் சிறிய அளவிலான டீக்கடைகள் மற்றும் ஜூஸ் ஸ்டால்கள் வைத்திருக்கிறார்கள். அவரவர்க்குப் பிடித்த ஜூஸை குடித்துவிட்டு, ஆளுக்கொரு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு மலையேற ஆரம்பித்தோம். ஒரு பையன் ‘கைடாக வருகிறேன்!’ என்றான். 150 ரூபாய் தர சம்மதித்து, அவனையும் கூட்டிக் கொண்டோம்.
நவ நரசிம்மர்கள் ஆங்காங்கே இருக்கிற மலைக் குன்றுகளில் தனித் தனியாக கோயில் கொண்டிருக் கிறார்கள். சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற மரங்களும், சுத்தமான குளிர் காற்றும் நம் கண்களை கட்டிப் போடுகின்றன.
முதல் மூன்று நரசிம்மர் கோயில்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாகத் தான் தோன்றியது. அருகே போனாலோ, செங்குத்தான, ஏறுவதற்கு சிரமமான படிக்கட்டுகள். அந்த மூன்று நரசிம்மர்களை தரிசிப்பதற்குள்ளேயே, எல்லாருடைய தண்ணீர் பாட்டில்களும் காலி! கைடாக வந்த பையன், அழகிய ஒரு ஓடையைக் காட்ட, அங்கே தாகத்தைத் தணித்துக் கொண்டு, அடுத்தடுத்த நரசிம்மரைத் தேடிப் போனோம்.
ஒரு நரசிம்மர் சந்நிதிக்கு அருகிலேயே ‘பிரகலாதா பாறை’ என்ற ஒன்று இருக்கிறது. அதுதான் பிரகலாதன் கல்வி கற்ற இடமாம்! கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் அளவிற்கு பரந்து கிடக்கிறது அந்தப் பாறை. அடர் ஆரஞ்சு நிறத்தில் மின்னுகிற அந்தப் பாறை முழுவதும் தெலுங்கு மொழியில் ஏதேதோ எழுதப்பட்டிருக்கிறது. அவை எல்லாம் பிரகலாதன் எழுதியவை என்கிறார்கள்.
அதற்கு மேல் நடக்க கால்கள் ஒத்துழைக்காததால், அறைக்குத் திரும்பிவிட்டோம். முதல் நாளில் 6 நரசிம்ம மூர்த்திகளைப் பார்த்திருந்தோம். அவை அனைத்தும் நாங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருந்தன.
மலையின் அடிவாரத்திலேயே கோயில் சார்பில் இலவச உணவு வழங்கப்படுகிறது. மதிய சாப்பாடு தேவை என்றால் காலை 9 மணிக்கே இத்தனை பேருக்கு உணவு வேண்டும் என்று தெரிவித்துவிட வேண்டும். சுவையான சாப்பாடு!
மறுநாள், எஞ்சியுள்ள 3 கோயில்களை தரிசிக்கக் கிளம்பினோம். ‘மொத்தம் 14 கிலோ மீட்டர் தூரம் முழுவதும் காட்டிற்குள்ளேயே போக வேண்டும். சுமோ அல்லது ஜீப்பில் போவதாக இருந்தால் 11 கிலோ மீட்டர் வரை போகலாம். எப்படி இருந்தாலும் அடுத்த 3 கிலோமீட்டர் தூரத்தை நடந்துதான் கடக்கவேண்டும்’ என்றார்கள். எல்லாம் வல்ல எம்பெருமான் நாராயணனை தரிசிக்கப் போகிறோம்.. நாம் நடப்பதற்கான சக்தியை அவன் தராமலா போய்விடுவான்? எனவே, நடந்தே போவது என்று தீர்மானித்தோம்.
‘காட்டுக்குள் நிறைய கரடி வரும். அப்படி வந்தால், பயப்படாமல் மரங்களின் மீது ஏறிக் கொள்ளுங்கள். அவை பேசாமல் போய் விடும்’ என்று சிலர் எச்சரித்தார்கள். கொஞ்சம் பயத்துடனே தான் உள்ளே நடந்தோம். நல்ல வேளையாக கரடி எதுவும் எங்கள் கண்ணில் படவில்லை.
அடர்ந்த காட்டின் நடுவே இருந்த ஒரு நரசிம்மர் கோயில் அருகில் ஒரே மரத்தில் 20, 25 பெரிய தேன் கூடுகள் இருந்து, ரொம்பவே மிரட்டின.
அதன்பிறகு நாங்கள் அடைந்த இடம், பலி கொடுக்கும் நரசிம்மர் ஆலயம். கோயிலின் சுவர், தரை என எங்கு பார்த்தாலும் ரத்தத் திட்டுக்களும், ஆட்டு ரோமங்களுமாக நம்மை அச்சுறுத்தும் காட்சிகள்! இறுதியாக, நரசிம்ம ஸ்வாமி உக்கிரமாக ஹிரண்ய கசிபுவின் வயிற்றைக் கிழித்த இடத்தையும் பார்த்துவிட்டு திரும்பினோம்.
போக, வர என்று மொத்தம் 28 கிலோமீட்டர் நடை பயணம். எங்களில் சிலருக்கு செருப்பெல்லாம் கூட அறுந்துவிட்டது. ஆனாலும், களைப்பே தெரியவில்லை. அதுதான் ஆண்டவன் அருள் என்று புரிந்தது. பார்த்துவிட்டுத் திரும்பும்போது, நல்ல மழை வேறு. மலை மீது மழையில் நனைவது எத்தனை இதமான அனுபவம் என்பதை அப்போது தான் உணர்ந்தோம்.
அகோபிலத்திற்கு அருகிலேயே ஒரு சிவாலயமும் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளியே அமைந்திருக்கும் 32 அடி உயர பிரம்மாண்டமான நந்தி சிலை நம்மை மெய் மறக்க வைக்கிறது. இந்த சிவாலயத்திற்கு மிக அருகில், ஒரு அருவி கொட்டுகிறது. இந்த அருவி நீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியாதாம். நாங்கள் வியந்து போய் நிற்க, ‘‘நீங்கள் சிவனில் நம்பிக்கை கொண்டிருந்தால், இது அவன் முடியில் இருந்து வருகிற கங்கை நீர். உங்களால் இதன் மூலத்தை அறிய முடியாது’’ என்றார், அங்கிருந்த ஒரு பெரியவர். அந்த மாவட்டம் முழுவதும் செழித்து வளர்கிற வாழைத் தோட்டங்களுக்கு, இந்த அருவி நீரே ஆதாரமாம்!
இறையும், இயற்கையும் ஒன்றோடு ஒன்று பிணைந்து, நம் எண்ணங்களை நல்ல வண்ணம் செதுக்குகிற ஒரு இடம்! திவ்யமாய் தரிசனம் கிடைத்த திருப்தியில், மனமகிழ்ச்சியோடு சென்னை வந்து சேர்ந்தோம்.
- லஷ்மி நாராயணன், சென்னை-33.
சதுரகிரி.. சந்தோஷம்!
என் மனதில் நீண்ட நாள் கனவாக, சதுரகிரி மலை ஏறி சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. ‘சதுரகிரி சென்று வந்தால் நினைத்த காரியம் நடக்கும்’ என்ற என் கொழுந்தன், அங்கே ஏழுமுறை சென்று வந்த அனுபவங்கள் பற்றியெல்லாம் விவரிக்கவும், அந்த ஆவல் இன்னும் அதிகரித்தது.
‘‘அடுத்த முறை செல்லும்போது சொல்லுங்கள்.. நாங்களும் வருகிறோம்’’ என்றேன் என் கொழுந்தனிடம். ‘‘உங்களால் மலை ஏற முடியுமா அண்ணி?’’ என்று அவர் கேட்டதற்கு, ‘‘மகாலிங்கமே துணை என்று ஏறுகிறேன்’’ என்றேன்.
அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, நாங்கள் 15 பேர் கொண்ட குழுவாக, மதுரையிலிருந்து புறப்பட்டோம். சுமார் இரண்டரை மணி நேரம் பயணம் செய்து, தாணிப்பாறை என்ற இடம் வரை காரில் சென்றோம். அதன்பின் மலை ஏற வேண்டும். குடிப்பதற்கு நீரும், உணவும் அவரவர் பையில் எடுத்துக் கொண்டு, காலை ஆறரை மணிக்கு ஏற ஆரம்பித்தோம்.
எங்கள் குழுவிலிருந்த 15 பேரில் 6 பேருக்கு அதுவே முதல் பயணம்! பொதுவாக, எனக்கு கொஞ்சம் அதிகமாகப் படி ஏறினாலே மூச்சு வாங்கும். ஆஸ்துமா பிரச்னை உண்டு. அதனால் கொஞ்சம் மெதுவாகத்தான் ஏறினேன். என் கணவர், எனக்காக என்கூடவே மெதுவாக வந்தார்.
பயணம் ஆரம்பமாகும்போது, கறுப்பு, வெள்ளை நிறம் கலந்த ஒரு நாய் எங்கள் பின்னாடியே வந்தது. எனக்கு நாய் என்றாலே பயம். ஆனால், விரட்டினாலும் அது போகவில்லை. நாங்கள் ஏறமுடியாமல் உட்கார்ந்த இடமெல்லாம், அதுவும் அமர்ந்து கூடவே வந்தது. ‘பிலாவடி கருப்பர்’ என்ற கோயில் வரை வந்தது. பிறகு காணோம். அந்த இடத்திலிருந்து மகாலிங்கக் கோயில் மிக அருகில்தான்.
கூடவே வந்து காணாமற் போன அந்த நாய் என் மனதை உறுத்திக் கொண்டிருக்கவும், முன்பே சதுரகிரிக்கு வந்திருந்த என் உறவினர்களிடம் விசாரித்தேன். அப்போது அவர்கள் சொன்னதுதான் சிலிர்க்க வைத்துவிட்டது.
‘எப்போதும் புதிதாக முதன்முதல் மலை ஏறும் பக்தர்கள் வழி மாறிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக, துணைக்கு பைரவர் வடிவத்தில் சித்தர்கள் வருவார்கள்’’ என்றார்கள் அவர்கள். சித்தர்கள் வாழும் மலை என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்?
கிட்டத்தட்ட நாலரை மணிநேரம் ஏறிய பிறகு, அந்த அற்புத, ‘சுயம்பு’ லிங்கமான சுந்தர மகாலிங்கத்தை தரிசித்தோம். அதற்கு வலதுபுறம் சுமார் 200 படிகள் ஏறி ‘சந்தன மகாலிங்கத்தை’யும் தரிசித்தோம்.
அவ்வளவு உயரம் ஏறியும், எனக்கு அன்று ஆஸ்துமா பிரச்னை வரவில்லை. இரண்டு அற்புத லிங்கங்களை தரிசித்த பிறகு, ஏறிவந்த களைப்பும் தெரியவில்லை.
சுந்தர மகாலிங்கத்தின் தரிசனம் கண்டு நான் அடைந்த ஆனந்தத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. ஆண்டவன் கருணையை அனுபவித்து உணர்ந்தால்தானே தெரியும்!
- உமாபாண்டியன், மதுரை -8.
புண்ணிய தலங்களுக்கு சென்று நீங்கள் பெற்று வந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும்!புண்ணிய தலங்களுக்கு சென்று நீங்கள் பெற்று வந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும்!

1 comment:

rajsteadfast said...

வணக்கம். நல்ல பதிவு.